வியாபாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம் பழநி உழவர் சந்தையில் பரபரப்பு

 

பழநி, ஜூன் 7: பழநி உழவர் சந்தையில் வியாபாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழநி சண்முகபுரம் சாலையில் உழவர் சந்தை 150க்கும் மேற்பட்ட கடைகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தினமும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் புதிய கட்டிடம் கட்டுவதற்காக காந்தி மார்க்கெட் இடிக்கப்பட்டது. அங்கு செயல்பட்ட கடைகள், உழவர் சந்தை அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில், காந்தி மார்க்கெட் வியாபாரிகள், உழவர் சந்தைக்கு முன்புறம் உள்ள இடத்தை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி உழவர் சந்தை விவசாயிகள் நேற்று காலை கடைகளை அடைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் நகராட்சி ஆணையர் வெற்றி செல்வி, நகர்நல அலுவலர் மனோஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளுடன் பேசி உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

The post வியாபாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம் பழநி உழவர் சந்தையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: