முக்கியமான 5 துறைகளையும் முதல்வர் சீராக செயல்படுத்தி வருகிறார்

நெல்லை, ஜூன் 7: நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று காலை நடந்த விழாவில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணப்பலன்களை வழங்கி அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: நெல்லை மாவட்டம், மாநகராட்சி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அரசு நலத்திட்ட துவக்க விழாவில் பங்கேற்று வருகிறேன். நெல்லை மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டமாக உள்ளது. திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதால் நெல்லை மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்தான் குறைந்த கட்டணத்தில் பயணிகளுக்கு சேவையாற்றிவருகிறது. பொதுமக்களை பாதிக்காத வகையில் பஸ்கட்டணம் இருக்க வேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனமாக உள்ளார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இலவச பயணதிட்டம், மாணவ, மாணவிகளுக்கு பஸ்பாஸ் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பல சவால்களை சந்திக்கும் போக்குவரத்து துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் ரூ.111 கோடியே 95 லட்சம் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள், வாரிசுதாரர்களுக்கான பணபலன்கள் வழங்வது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குடிநீர், மின்சாரம், சாலை, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட 5 முக்கிய துறைகளையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். ஜனநாயக முறைப்படி அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளர் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

மாநகர விரிவாக்க பகுதிகளுக்கு மினி பஸ்கள்
விழாவில் பாளை தொகுதி எம்எல்ஏ அப்துல்வஹாப் பேசுகையில் ‘‘ போக்குவரத்துத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக தலைவர் மு.க. ஸ்டாலின் அரசு செயல்படுகிறது. மேலும் ஓய்வின்றி உழைக்கும் தொழிலாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலப்பாளையம், சி.என். கிராமம், பெருமாள்புரம், தாமிரபரணி காலனி உள்ளிட்ட மாநகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கு மினி பஸ்களை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post முக்கியமான 5 துறைகளையும் முதல்வர் சீராக செயல்படுத்தி வருகிறார் appeared first on Dinakaran.

Related Stories: