சீரமைப்பு பணிகள் முடிந்ததால் அண்ணா மேம்பாலத்தின் 50ம் ஆண்டு கொண்டாட்டம்: ஜூன் இறுதியில் நடைபெறும் என அதிகாரி தகவல்

* சிறப்பு செய்தி
சென்னையின் அடையாளமாக திகழும் அண்ணா மேம்பாலத்தின் 50ம் ஆண்டு கொண்டாட்டம் ஜூன் இறுதியில் நடைபெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் அடையாளமாக விளங்கும் அண்ணா சாலை 400 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்தது. இந்த சாலையானது தலைமைச்செயலகம் முதல் கிண்டி வரை 15 கி.மீ. நீளம் கொண்டது. சென்னையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, ஜி.என். செட்டி சாலைகள் சந்திக்கும் பகுதியில் மேம்பாலம் ஒன்றை 1971ம் ஆண்டு கட்ட திட்டமிடப்பட்டது.

அதற்கு ரூ.66 லட்சம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. 250 அடி நீளம், 48 அடி அகலத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 1969ம் ஆண்டு அண்ணா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி இந்த மேம்பாலத்தை கட்ட உத்தரவிட்டார். 21 மாதத்தில் இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 1973ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி மேம்பாலம் திறக்கப்பட்டது. சென்னையில் எத்தனையோ மேம்பாலங்கள் அமைக்கப்பட்டாலும் அண்ணா மேம்பாலத்திற்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. இதனை அன்றைய காலத்தில் ஜெமினி மேம்பாலம் என்று அழைத்தது உண்டு.

சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம் இதுதான். இந்திய அளவில் மூன்றாவதாக கட்டப்பட்ட மேம்பாலம் என்ற சிறப்புக்கும் உரியது. இது தென்கிழக்கு ஆசியாவின் முதல் மேம்பாலம் ஆகும். இந்நிலையில் திரைப்படங்களில் சென்னை அண்ணா சாலையை தவிர்த்து காட்சிகளை அமைக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு, பெரும்பாலான திரைப்படங்களில் இந்த பாலம் வரும். அண்ணா சாலையில் இருந்து மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தி.நகர், கிண்டி, பாரிமுனை செல்வதற்கு வசதியாக 5 முனை சாலை சந்திப்பில் இந்த மேம்பாலம் அமைந்துள்ளது.

இந்த மேம்பாலம் 600 மீட்டர் நீளம் கொண்டது. அந்த மேம்பாலம் கட்டியபோது தினமும் அந்த வழியாக 20 ஆயிரம் வாகனங்கள் சென்றன. தற்போது வாகனங்களின் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த மேம்பாலத்தின் அருகில் அப்போது ஜெமினி ஸ்டூடியோ இருந்தது. எனவே ஜெமினி மேம்பாலம் என்றும் அழைக்கப்பட்டது. அண்ணாவின் மறைவுக்கு பிறகு இந்த மேம்பாலத்துக்கு அண்ணா மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது. மேலும், குதிரைப் பந்தயம் தடை செய்ததை நினைவுகூரும் வகையில் பாலத்தின் கீழே குதிரையைக் கட்டுப்படுத்தும் மனிதன் சிலை உள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் அண்ணா மேம்பாலத்தை சிஆர்ஐடிபி 2021-22ம் திட்டத்தின் கீழ் ரூ.8.85 கோடியில் சீரமைக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார். அதன்படி இந்த மேம்பாலத்தை வலுப்படுத்தி அழகுபடுத்தி புதுப்பிக்கும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கியுள்ளனர். இதற்காக அரசு சார்பில் ரூ.8.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள 97 தூண்களும் நவீன ரெடிமேட் கான்கிரீட் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இப்பாலத்தின் தூண்களை ஜிஆர்சி பேனல்கள் கொண்டு மறுவடிவமைப்பு செய்யவும், இப்பாலத்தின் கீழே பொலிவூட்டும் வகையில் பசுமை செடிவகைகள் அமைக்கப்படுகிறது. பொது மக்கள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் : அண்ணா மேம்பாலத்தை புதுப்பிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இது பழமை மாறாமல் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பாலத்தின் திட்டமிடப்பட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்தது. மேம்பாலம் 50 ஆண்டு விழா கொண்டாடப்படும் தேதி அறிவிக்கப்படும் தேதிக்கு 5 நாட்களுக்கு முன்பு மேம்பாலத்திற்கு வண்ணம் பூசப்படும். அதாவது, பாலத்திற்கு பயன்படுத்தப்படும் பெயின்டானது தூசு, துகள்களை படியவிடாமல், பழமை மாறாமல் இருக்கும் அளவிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. மேம்பாலத்தின் அருகே புல்தரைகளில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் அழகிய தமிழ் எழுத்துக்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரது பொன்மொழிகளும் தூண்களில் செதுக்கப்பட உள்ளது.

இதனிடையே, மேம்பாலத்துக்கு அருகில் அமெரிக்கா துணை தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்திற்கு விசா பெற வரும் மக்கள் சாலையின் நடைப்பாதையில் நிற்பது வழக்கமான ஒன்று. இதில் பெண்களும் மணிக்கணக்காக நிற்கின்றனர். இவர்கள் கழிவறை செல்ல வேண்டும் என்றால் அருகில் உள்ள ஆக்ஸ்போர்ட்டு பள்ளியின் கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மேம்பாலம் இறக்கத்தில் அமர்வதற்கான நிலையம் மற்றும் கழிவறை கட்டப்பட உள்ளது. இதனை திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post சீரமைப்பு பணிகள் முடிந்ததால் அண்ணா மேம்பாலத்தின் 50ம் ஆண்டு கொண்டாட்டம்: ஜூன் இறுதியில் நடைபெறும் என அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: