ரஷ்யாவின் ரூபிளாக மாற்றி அனுப்புவதாக கூறி 40 மாணவர்களிடம் ரூ.1.50 கோடி மோசடி: போரூர் ஆசாமி கைது

ஆவடி: ரஷ்யாவில் படிக்கும் மாணவர்களுக்கு ரஷ்யாவின் ரூபிளாக மாற்றி அனுப்புவதாக கூறி 40 மாணவர்களிடம் ரூ.1.50 கோடி மோசடி செய்த போரூர் ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார். கடலூரை சேர்ந்தவர் ராணி (47). இவரது மகள் மஞ்சு தர்ஷினி. ரஷ்யா நாட்டில் உள்ள மருத்துவ அகாடமி பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். பல்கலைக்கழக நிர்வாகம், கல்வி கட்டணத்தை ரஷ்யாவின் பணமான ரூபிளாக செலுத்தவேண்டும் என கூறியுள்ளது.

இதனால் அதே கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கும் மதுரை சங்கம்பட்டியை சேர்ந்த பொன்செல்வன் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த கவியரசு ஆகியோரை சந்தித்து, மஞ்சு தர்ஷினி பல்கலைக்கழகத்தில் கல்வி கட்டணத்தை எப்படி செலுத்துவது என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், சென்னை அடுத்த ேபாரூரில் எங்களுக்கு தெரிந்த குழந்தை அந்தோணி ராஜா (43) என்பவர் உள்ளார். அவரிடம் பணம் கொடுத்தால் அதை ரஷ்யாவின் ரூபிளாக மாற்றி எங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பிவிடுவார். அதற்கு பின் பல்கலைக்கழகத்தில் செலுத்திவிடலாம் என கூறியுள்ளனர்.

இதுகுறித்த விவரத்தை தனது பெற்றோரிடம் மஞ்சுதர்ஷினி கூறியுள்ளார். அதன்படி 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயை குழந்தை அந்தோணி ராஜாவின் வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் குழந்தை அந்தோணி ராஜா, பணத்தை அனுப்பவில்லையாம். இதுகுறித்து குழந்தை அந்தோணி ராஜாவிடம் கேட்டபோது பணத்தை அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த மஞ்சு தர்ஷினியின் தாய் ராணி, ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் எம்பிபிஎஸ் மாணவர்களான பொன்செல்வம், கவியரசு உதவியுடன் 40க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை பெற்று குழந்தை அந்தோணி ராஜா மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று குழந்தை அந்தோணி ராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரஷ்யாவின் ரூபிளாக மாற்றி அனுப்புவதாக கூறி 40 மாணவர்களிடம் ரூ.1.50 கோடி மோசடி: போரூர் ஆசாமி கைது appeared first on Dinakaran.

Related Stories: