வலங்கைமான் ஒன்றியத்தில் பள்ளிகளில் தூய்மை பணி : அதிகாரிகள் ஆய்வு

வலங்கைமான், ஜூன் 6: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் செயல்படும் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் 7ம் தேதி திறக்க இருந்த தொடக்கப்பள்ளிகள் ஜூன் 12ம் தேதியும், 6 முதல் 12 வகுப்பு வரையிலான உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் ஜூன் 14ம் தேதியும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் அரசு தொடக்கக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் பள்ளிகளின் வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுப்புற வளாகம், கரும்பலகைகளுக்கு வண்ணம் தீட்டுதல், மின் இணைப்பு சரிசெய்தல், குடிநீர் தொட்டிகள் தூய்மை செய்தல், கதவு சன்னல்கள் சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை வட்டார கல்வி அலுவலர்கள் சுகந்தி, அன்பழகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பள்ளி திறப்பதற்கு தேவையான அறிவுரைகளை தலைமையாசிரியர்களுக்கு வழங்கினர்.

The post வலங்கைமான் ஒன்றியத்தில் பள்ளிகளில் தூய்மை பணி : அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: