முத்துப்பேட்டையில் அன்னாசிப்பழம் விற்பனை களை கட்டியது

முத்துப்பேட்டை, ஜூன் 6: முத்துப்பேட்டையில் அன்னாசிப்பழம் விற்பனை களை கட்டியுள்ளது. ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம். பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இப்போது எல்லா நாடுகளிலும் உற்பத்தி ஆகிறது. இதில் இந்தியாவில் பல பகுதியில் உற்பத்தி செய்யபட்டாலும், கேரளாவில் உற்பத்தி அதிகம்.

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை அழற்சி நோயில் இருந்து விடுபடலாம். ரத்தசோகை, மஞ்சள் காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும், இப்பழத்திற்கு உள்ளது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தற்போது அன்னாசிப்பழம் வியாபாரம் களைகட்டி உள்ளது. அன்னாசிப்பழம் கேரளாவில் இருந்து அதிகளவில் மதுரை, திருச்சி மார்க்கெட்டுக்கு வந்து முத்துப்பேட்டை பகுதிக்கு வருகிறது. இந்த பழம் ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அன்னாசி பழத்தை பொதுமக்களும் ஆர்வத்துடன் பேரம் பேசாமல் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே அன்னாசிப்பழம் விற்பனை செய்து வரும் பாலகுமார் கூறுகையில், மதுரை சந்தையில் வாங்கி வருகிறோம். போக்குவரத்து செலவு, ஆள் கூலி காரணமாக ஒரு கிலோ ரூ.65க்கு விற்பனை செய்கிறோம். இதில் குறிப்பிட நேரத்தில், விற்பனை ஆகாவிட்டால் பழம் வீணாகி விடும். ஆனால் சில தினங்களாக விற்பனை அமோகமாக உள்ளது என்றார்.

The post முத்துப்பேட்டையில் அன்னாசிப்பழம் விற்பனை களை கட்டியது appeared first on Dinakaran.

Related Stories: