புதுக்கோட்டை, ஜூன் 6: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புதுக்கோட்டை நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் தலைமை வகித்தார். துணைத் தலைவர் லியாகத்அலி, நகராட்சி ஆணையர் (பொ) பாலாஜி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
என் நகரத்தை தூய்மையாகவும். சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்புமாகும் என உறுதிமொழியேற்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக நகரமைப்பு ஆய்வாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். நகர்மன்றத் தலைவரின் தனி உதவியாளர் குமாரவேல் நன்றி கூறினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 மரக்கன்றுகளை முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா நட்டுவைத்தார். நிகழ்ச்சியில் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) முருகேசன், தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) ஜெயராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதேபோல, காந்திநகர் நகராட்சித் தொடக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் மங்கையர்கரசி தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி காப்பாளர் ஈஸ்வரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர். தர்மராஜ், அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திக் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
The post உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூய்மைக்கான மக்கள் இயக்க தூய்மை உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.