மாமல்லபுரம், திருக்கழுக்குன்றத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி

 

மாமல்லபுரம்: மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, வெப்பம் வாட்டி வதைக்கிறது. மேலும், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 104 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து, வெப்பம் அதிகரிப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதேபோல், மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், சிலர் வெயிலுக்கு பயந்து வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் நேற்று மாலை 3 மணிக்கு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக மிதமான மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று பிற்பகல் குளிர்ந்த காற்றும் வீசத் தொடங்கியது. மாலைப்பொழுது திடீர் மழையும் பெய்ததால் இத்தனை மாதங்கள் வெயில் கொடுமையால் அவதிப்பட்ட மக்கள், இந்த திடீர் மழையால் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

The post மாமல்லபுரம், திருக்கழுக்குன்றத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: