கும்மிடிப்பூண்டியில் பொதுக்கூட்டம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, பஜார் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு விவசாயி வட்ட செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் துளசிநாராயணன், மாவட்ட செயலாளர் சம்பத், மாவட்ட துணைத் தலைவர் ரவி, முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட குழு உறுப்பினர் செல்வராணி, வட்ட துணைத் தலைவர் ரவி, கட்டுமான சங்கத்தின் தலைவர் சீனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் சண்முகம் கலந்து கொண்டார். பின்னர், அவர் பேசுகையில், ‘‘ரெட்டம்பேடு ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

நெல் மூட்டைக்கு ரூ.60 பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும். நேமலூர் ஊராட்சியில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். ஐயர்கண்டிகையில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் 11 ஏக்கரை மீட்க வேண்டும். சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் உள்ள மேய்கால் மற்றும் நத்தம் புறம்போக்கு நிலங்களில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஈகுவார்பாளையம் ஊராட்சியில் உள்ள சித்தர் நத்தம் செல்லும் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். பூவலை ஊராட்சியில் வீட்டு மனை, தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும். ரெட்டம்பேடு- வழுதலம்பேடு ஊராட்சிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.

சூரப்பூண்டி ஊராட்சியில் விலை நிலங்களுக்கு செல்வதற்கு தடையாக அமைந்துள்ள முள்வேலி அகற்ற வேண்டும். ஆரம்பாக்கம் பகுதியில் 50 ஆண்டுகாலமாக உள்ள மின் வயரை உடனடியாக மாற்ற வேண்டும். ஆரம்பாக்கம் – ஆர்.என்.கண்டிகை பகுதியில் கட்டி முடித்து பத்து ஆண்டுகளுக்கு மேலான அங்கன்வாடி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு அந்தந்த ஊராட்சிகளில் ஒரு மாதத்திற்குள் பட்டா வழங்க வேண்டும் இல்லை என்றால் குடியேறும் ஆர்ப்பாட்டம் நடக்கும்.’’ என கூறினார். இறுதியில் வட்டத்துணைத் தலைவர் ரவி நன்றி கூறினார்.

The post கும்மிடிப்பூண்டியில் பொதுக்கூட்டம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: