புதுடெல்லி: ரயில் பயணிகளின் பாதுகாப்பில் தொடர் அலட்சியம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சிஏஜி அறிக்கையில், ‘ரயில்வே தடம் புரண்டது’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கை தற்போது விவாதிக்கப்படுகிறது.
ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் 275 பேர் பலியான நிலையில், 1200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் சில டெக்னிக்கல் காரணங்கள் கூறப்பட்டாலும், ரயில் பயணிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதனால் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையில், ரயில் விபத்துக்களுக்கு பிறகு நடைபெறும் ஆய்வுக் குறைபாடுகள் முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவித்துள்ள செய்தி தற்போது வெளியாகி உள்ளது. மேலும் ரயிலின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான பணியில் ஆள் பற்றாக்குறை இருப்பதும் மற்றொரு காரணம் என்று கூறப்பட்டது. மேலும் ரயில்வே நிர்வாகத்துக்கு அளிக்கப்பட்ட 2 பரிந்துரைகளில், விபத்து தொடர்பாக நடத்தப்படும் விசாரணையை தீவிரமாக உறுதி செய்வதுடன், உரிய கால அவகாசத்தை நியமிக்க வேண்டும் என்றும், தண்டவாள பராமரிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த சிஏஜி, தங்களது அறிக்கையில் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் விவரம் வருமாறு: டிராக் ரெக்கார்டிங் கார்கள் மூலம் ரயில் தண்டவாளத்தின் வடிவியல் மற்றும் கட்டமைப்பு நிலைகளை ஆய்வு செய்யும் பணிகளில் 30 முதல் 100 சதவீதம் வரை குறைபாடு உள்ளது. ரயில் வழித்தட பராமரிப்பு பணிகளை (டிஎம்எஸ்) ஆன்லைன் மூலமாக கண்காணிக்க முடியும். ஆனால் டிஎம்எஸ் கண்காணிப்பு நடைமுறையானது ஒழுங்காக செயல்படவில்லை. கடந்த 2017 முதல் 2021 மார்ச் வரை பொறியியல் துறையின் குறைபாடு காரணமாக 422 ரயில் தடம் புரளும் சம்பவங்கள் நடந்துள்ளன. தண்டவாளத்தை முறையாக பராமரிக்காததால் 171 முறையும் ரயில்கள் தடம் புரண்டுள்ளது. மெக்கானிக்கல் துறையின் குறைபாடு காரணமாக 182 முறையும், லோகோ பைலட்களின் (டிரைவர்) தவறு காரணமாக 154 முறையும் ரயில்கள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளன. ஆப்ரேட்டிங் துறையின் தவறு காரணமாக 275 முறை ரயில்கள் விபத்துக்குள்ளாகி உள்ளது. ரயில் விபத்துக்கள் தொடர்பான 63 சதவீத சம்பவங்களில், இன்னும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. 49 சம்பவங்களில், அறிக்கையை ஏற்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் செய்துள்ளனர்.
விதிமுறைகள் மற்றும் ஒருங்கிணைந்த உத்தரவுகள், பல்வேறு துறைகள் இடையேயான தொடர்பு, உரிய ஆய்வு ஆகியவற்றை முறையாக மேற்கொள்ளாததே பெரும்பாலும் ரயில் தடம் புரளும் சம்பவங்களுக்கு காரணமாக அமைகின்றன. ரயில் தண்டவாளம் புனரமைப்பு பணிக்கு 2018 -19ம் ஆண்டில் ரூ.9607.65 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2019-20ம் ஆண்டில் ரூ.7,417 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதேபோல், தண்டவாள புனரமைப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட தொகையும், முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு, தனது ஒவ்வொரு தோல்விக்கும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அதையே ஒடிசா விபத்திலும் செய்து வருகிறது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்திலும் நடந்த ரயில் விபத்துகள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. நாட்டில் எப்போதெல்லாம் ரயில் விபத்துகள் நடக்கிறதோ, அப்போதெல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுகின்றனர். பிரதமர் மோடியும் ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டபோதும் இதே கருத்தை தெரிவித்தார். ஆனால், ‘ரயில்வே தடம் புரண்டது’ என்ற தலைப்பில் சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நடக்கும் 90 சதவீத விபத்துகள், அமைப்பு ரீதியான செயலற்ற தன்மையை காரணம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ரயில் பயணிகளின் பாதுகாப்பில் தொடர் அலட்சியம் சிஏஜி அறிக்கையில் ‘ரயில்வே தடம் புரண்டது’ என்று கூறியது ஏன்?: சுட்டிக்காட்டிய குறைபாடுகளை சரிசெய்யாத ரயில்வே appeared first on Dinakaran.