*ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
வானூர் : விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள இடையன்சாவடி கிராமத்தில் ஸ்ரீவர்ணமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் 3 பக்தர்களின் மொட்டை தலையில் மிளகாய் கரைசல் உட்பட 108 கரைசல்கள் ஊற்றி அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செய்தனர். வானூர் தாலுகா இடையன்சாவடி கிராமத்தில் ஆண்டுதோறும் வர்ணமுத்து மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. 8 நாட்கள் நடைபெறும் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை சாகைவார்த்தலுடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய விழாவான 5ம் நாள் விழா அம்மனுக்கு 108 அபிஷேகம் நடந்தது. இதற்காக கிராமத்தில் உள்ள மூன்று பெரியவர்கள் திருவிழாவிற்கு காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருந்து அபிஷேகத்தில் கலந்துகொண்டனர். இதற்காக மொட்டை அடிக்கப்பட்ட மூவரும் கோயில் முன்பு மேடையில் அமரவைக்கப்பட்டு எண்ணெய், வாசனை திரவியங்கள், அபிஷேகப் பொருட்கள், பழ வகைகள், விபூதி, சந்தனம், குங்குமம், மிளகாய் கரைசல் உள்ளிட்ட 108 பொருட்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவர்களின் தலையில் ஊற்றப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது. கடைசியாக கையால் பத்தர்களால் அறைக்கப்பட்ட மிளகாய் தூள் கரைசல் அவர்களுக்கு மூன்று கைகள் கொடுக்கப்பட்டது.
அதனை அவர்கள் வாங்கி குடித்தவுடன் அவர்களின் தலையில் அக்கரைசல் ஊற்றப்பட்டது. கடைசியாக வேப்பிலை கரைசல் ஊற்றப்பட்டு நிறைவடைந்தது. பக்தர்கள் அனைவரும் பக்தி முழக்கங்களுடன் தரிசனம் செய்தனர். பிறகு அவர்கள் கோயிலுக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து செடல் உற்சவத்தை துவக்கி ஊர்வலம் வந்து அதன்பின் பக்தர்கள் அனைவரும் தீ மிதித்தனர்.
இதில் ஏராளமான உள்ளுர், சுற்றுவட்டார கிராம மக்கள், ஆரோவில் வாசிகள் என ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம்
செய்தனர்.
மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்வதற்கான காரணம்
இடையன்சாவடி கிராமத்தில் 90 ஆண்டுகளுக்கு முன் கோயில் அருகே உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்தது. அதனை அந்த கிராமத்தில் உள்ள ஹரிசீனுவாசன் என்பவர் பிடித்து குடித்துவிட்டு அவர் அருள்வாக்கு கூறியுள்ளார். இந்த கிராமத்தில் மிளகாய்தூள் அபிஷேகம் செய்தால்தான் நோய் இன்றி அனைத்து பொதுமக்களும் வாழ்வார்கள் என்று கூறியதாகவும். அதிலிருந்து திருவிழாவில் ஹரிசீனுவாசனுக்கு மிளகாய்தூள் அபிஷேம் செய்யப்பட்டுவந்தது.
அவர் 25 ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்ட நிலையில் அவருக்கு பதிலாக பாவாடை, கண்ணப்பன், மலையாளத்தார் ஆகியோருக்கு அபிஷேகம் நடந்துவந்தது. தற்போது மலையாளத்தார், பன்னீர், முத்துவேல் ஆகியோர் அங்காளம்மன், வர்ணமுத்துமாரியம்மன், இளங்காளியம்மன் ஆகியோர்களாக பாவிக்கப்பட்டு இந்த அபிஷேகம் ஐதீக முறைப்படி நடந்தது.
The post ஸ்ரீவர்ணமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் தலையில் மிளகாய் கரைசல் ஊற்றி அபிஷேகம் appeared first on Dinakaran.