தனித்திறன் போட்டிகளில் அசத்தும் நகராட்சி பள்ளி மாணவர்கள்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட நின்னக்கரை கிராமத்தில் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்து 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த பள்ளி நூற்றாண்டு விழாவை கொண்டாடியுள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 290 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக சீனி சந்திரசேகர் என்பவரும், 9 ஆசிரியர், ஆசிரியைகளும் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பயிலும் 290 மாணவ, மாணவிகளில் 280 பேர் தனித்திறன் போட்டிகளில் கலந்துகொண்டு நற்சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளுக்கிடையே நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர். மேலும் தொல்லியல் துறை சார்பாக நடந்த போட்டிகளிலும் இப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று பரிசு பெற்றுள்ளனர்.

சிலம்பம், சதுரங்க போட்டிகளில் முதலிடம்: குறிப்பாக, இந்த பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி பிரியலட்சுமி, ஆங்கில கையெழுத்து போட்டிகளில் கலந்துகொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். அதன்படி, மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த ஆங்கில கையெழுத்து போட்டிகளில் மாணவி பிரியலட்சுமி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதேபோல், இப்பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவி ரக்சயா, சிலம்ப பயிற்சி பெற்று, மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதேபோல் இப்பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் தமிழ்குமரன் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு பெற்று அசத்தியுள்ளார்.

மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு: கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜக்கி பவுண்டேசன் சார்பில் தாம்பரத்தில் மாநில அளவில் நடைபெற்ற தனித்திறன் போட்டிகளில் இந்த பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்ற இந்த பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமான பரிசுகளைப் பெற்றனர். இவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதேபோல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டிகளிலும் கலந்துகொண்ட இப்பள்ளி மாணவ, மாணவிகள் பரிசுகளை குவித்தனர். இறையன்பு பாராட்டு கடிதம்: இந்த பள்ளி மாணவர்களின் தனித்திறனை பாராட்டி, தலைமைச் செயலாளர் இறையன்பு கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி இப்பள்ளிக்கு ஒரு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கலைத்திறனிலும் தனித்திறனிலும் சாதனை படைத்து வரும் இப்பள்ளியின் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது சாதனை பயணம் மென்மேலும் தொடர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆசிரியர்களும் அசத்தல்: மாணவ மாணவிகள் மட்டுமல்லாது, இந்தப்பள்ளியைச் சேர்ந்த ஆசியர், ஆசிரியைகளும் தனித்திறனில் சிறந்து விளங்குகின்றனர். இதற்காக அவர்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியரான சீனிசந்திரசேகர், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்று 4வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இப்பள்ளியில் பணியாற்றும் தீபா என்ற ஆசிரியை மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்று அசத்தியுள்ளார்.

 

The post தனித்திறன் போட்டிகளில் அசத்தும் நகராட்சி பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: