ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை, கோரமண்டல் ரயிலில் பயணித்த 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் உதயநிதி

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை, கோரமண்டல் ரயிலில் பயணித்த 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர் என சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு, நேற்று ஒடிசா சென்றது. அங்கேயே இருந்து தமிழர்களின் விவரம் குறித்து அறிய முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ஒடிசாவில் மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததாலும் ரயிலில் பயணித்த தமிழர்களின் விவரம் தெரியவந்ததால் அமைச்சர்கள் குழு இன்று தமிழகம் திரும்பியது.

இதையடுத்து சென்னை வந்தடைந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது; “நேரடியாக மருத்துமனைக்கு சென்று ஆய்வு நடத்தியதில் அங்கு தமிழர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பிணவறைக்கு சென்று பார்வையிட்டோம். அங்கும் தமிழர்கள் யாரும் இல்லை என்று தெரிய வந்தது. பின்னர் அங்கிருந்த அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினோம்.

அவர்களும் எங்கும் தமிழர்கள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை. 8 பேரின் தகவல் இல்லாமல் இருந்த நிலையில், 2 பேரின் தகவல் கிடைத்துள்ளது.

அருண், கல்பனா, கமல், மீனா, ரகுநாதன், கார்த்திக் ஆகிய 6 பேரும் நலமுடன் உள்ளதாக, அவர்களுடன் உடன் பயணித்த நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர். எங்களுடன் வந்த அதிகாரிகள் குழு ஒடிசாவில் உள்ளனர். விரைவில் முழுமையான தகவல் வரும். வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கூறினார்.

The post ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை, கோரமண்டல் ரயிலில் பயணித்த 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.

Related Stories: