வைகாசி பிரமோற்சவத்தின் 4வது நாளில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம், ஜூன் 4: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், வைகாசி பிரமோற்சவத்தின் 4ம் நாளான நேற்று சேஷ வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவம் மே 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 3ம் நாளான நேற்று முன்தினம் காலை வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கருடசேவை உற்சவத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இதனைதொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை வரதராஜ பெருமாள் அனுமந்த வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது திடீரென காஞ்சிபுரத்தில் சூறாவளி காற்றுடன் திடீர் மழை பெய்ததால் பெருமாள் வீதிஉலா வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மாலை சுமார் 6 மணியளவில் தொடங்கவேண்டிய வீதியுலா இரவு 9 மணியளவில் தொடங்கியது. ஏற்கனவே காலையில் கருடசேவை உற்சவத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சாமி வீதிஉலா சென்றதால் அதை சுமந்து செல்லும் கோடியர்கள் என அழைக்கப்படும் சாமி தூக்கும் ஊழியர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதனால் 9 மணிக்கு தொடங்கிய அனுமந்த வாகன வீதியுலா நள்ளிரவு 2 மணிக்கு பிறகே கோயிலை வந்தடைந்தது.

இதனையடுத்து, நேற்று காலை பெருமாள் சேஷ வாகனத்தில் வீதிஉலா உற்சவம் தொடங்கியது. போதிய ஓய்வு இடைவெளி இல்லாமல் காலை 6 மணியளவில் சேஷ வாகன வீதி உலா தொடங்கியதால் கீரை மண்டபம் பகுதி வரை சென்று திரும்பலாம் என கோடியர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்காத அதிகாரிகள் முறைப்படி சென்று திரும்ப வேண்டும் என்று கோடியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். இதனால் சோர்வு காரணமாக அதிக இடங்களில் சேஷ வானத்தை நிறுத்தி ஓய்வெடுத்தனர்.

மேலும் கீரை மண்டபத்தை கடந்து மூங்கில் மண்டபம் வரை சாமி தூக்கி வந்த ஊழியர்கள், இதற்கு மேல் தங்களால் சாமியை தூக்கிசெல்ல இயலாது என தெரிவித்து பாதியிலேயே மீண்டும் திருக்கோயில் நோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காமராஜர் சாலை கச்சபேஸ்வரர் கோயில், வழக்கமாக மண்டகப்படி நடக்கும் இடமான சங்கர மடம் உள்ளிட்ட பகுதிகளில் சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாளை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

The post வைகாசி பிரமோற்சவத்தின் 4வது நாளில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: