மாமல்லபுரம் – புதுச்சேரி 4 வழிச்சாலை பணிக்காக வேக கட்டுப்பாட்டு கருவிகள் சிசிடிவி கேமரா இடமாற்றம்: அதிகாரிகள் ஆய்வு

மாமல்லபுரம், ஜூன் 4: சென்னை – புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலை முக்கிய முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. கடந்த 26 ஆண்டுகளுக்கு முன், ஒருவழி சாலைையாக இருந்தது. போக்குவரத்து மிகுதி காரணமாக கடந்த 1998ம் ஆண்டு இருவழி சாலையாக தமிழக அரசு விரிவுபடுத்தியது. மாமல்லபுரம் நகருக்கு வரும் சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டுவருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர சென்னை, அக்கரையில் இருந்து மாமல்லபுரம் வரை 30 கி.மீ. தூரத்திற்கு 2018ம் ஆண்டு 4 வழிச் சாலையாக மேம்படுத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு வரை கிழக்கு கடற்கரை சாலையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வந்த நிலையில், தற்போது ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. மேலும், இச்சாலையை மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை விரிவுபடுத்தி, விபத்துகளை குறைக்கும் வகையிலும், வாகனங்கள் விரைவாக செல்லும் வகையிலும் ஒன்றிய அரசு முடிவெடுத்து, இதற்காக ₹1,270 கோடியை ஒதுக்கி அரசாணை வெளியிட்டது.

முதல்கட்டமாக மாமல்லபுரம் – முகையூர் இடையே 30 கி.மீ. தூரம், 2வது கட்டமாக முகையூர் – மரக்காணம் வரை 30 கி.மீ. தூரம், 3வது கட்டமாக மரக்காணம் – புதுச்சேரி வரை 30 கி.மீ தூரம் என 90 கி.மீ. தூரம் வரை 4 வழி சாலையாக விரிவுபடுத்த முடிவு செய்து தற்போது மாமல்லபுரம் – முகையூர் இடையே ஆங்காங்கே பணி நடந்து வருகிறது. இந்நிலையில், 4 வழி சாலை பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள், மரங்கள், கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், சாலை பணிக்கு இடையூறாக மாமல்லபுரம் இசிஆர் நுழைவு பகுதியில் 4 சிசிடிவி கேமராக்கள், பூஞ்சேரியில் மருத்துவமனை அருகே 2 சிசிடிவி கேமராக்கள், பூஞ்சேரி 4 முனை சந்திப்பில் 2 சிசிடிவி கேமராக்கள், 2 வாகன வேக கட்டுப்பாட்டு கருவிகளை அகற்றி மாற்று இடத்தில் அமைப்பதற்காக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் மற்றும் ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாமல்லபுரம் – புதுச்சேரி 4 வழிச்சாலை பணிக்காக இசிஆர் சாலையில் இடையூறாக உள்ள சிசிடிவி கேமராக்கள், வேக கட்டுப்பாட்டு கருவிகளை வேறு இடத்தில் அமைக்க கேட்டுக் கொண்டனர். அதனடிப்படையில், நேற்று ஆய்வு செய்துள்ளோம். விரைவில், சிசிடிவி கேமராக்கள், வேக கட்டுப்பாட்டு கருவிகள் அகற்றப்பட்டு மாமல்லபுரம் போலீசாரிடம் ஆலோசனை பெற்று மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

விபத்து பகுதிகளில் அமைக்க வேண்டும்
இசிஆர் சாலையில் இருந்து அகற்றப்படும் சிசிடிவி கேமராக்கள், வேக கட்டுப்பாட்டு கருவிகளை அதிகமாக விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து, அங்கு விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும், இசிஆர் சாலையில் வழிப்பறி, கொள்ளை, வாகன திருட்டு, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும் அடையாளம் தெரியாத வாகனங்களை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களை கண்காணித்து தடுக்கும் வகையில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 இடங்களில் பிரமாண்ட மேம்பாலம்
மாமல்லபுரம் இசிஆர் நுழைவு பகுதியில் ஒரு மேம்பாலம், பூஞ்சேரி சந்திப்பில் ஒரு மேம்பாலம், மரக்காணம் அடுத்த கூணிமேட்டில் ஒரு மேம்பாலம் என 3 பிரமாண்ட மேம்பாலங்களும், மாமல்லபுரம் அடுத்த மணமை, குன்னத்தூர், வெங்கப்பாக்கம், விட்டிலாபுரம், முதலியார்குப்பம், சீக்கினாங்குப்பம், ஓதியூர் எல்லையம்மன் கோயில், விளம்பூர், கடப்பாக்கம், மரக்காணம், கூணிமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 38 சிறிய பாலங்களும் அமைகிறது. மேலும், கூவத்தூர் அடுத்த வடபட்டினம், மரக்காணம் அடுத்த தேன்பாக்கம், கூணிமேடு உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு சுங்கச்சாவடி என 3 சுங்கச்சாவடிகள் அமைகிறது.

The post மாமல்லபுரம் – புதுச்சேரி 4 வழிச்சாலை பணிக்காக வேக கட்டுப்பாட்டு கருவிகள் சிசிடிவி கேமரா இடமாற்றம்: அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: