பயிர்கள் செழிக்க கோடை உழவு

வடலூர், ஜூன் 3: குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் தற்போது கோடை மழை பரவலாக பெய்ய ஆரம்பித்துள்ளது. கோடை மழையை பயன்படுத்தி, கோடை உழவு மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். நிலத்தை நன்கு உழவு செய்வதால் மேல் மண் துகள்களாகி நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும். மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைப்பதால் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண் வளம் பெருகும். வயலில் உள்ள கோரை போன்ற களைகள், மண்ணின் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது முக்கிய தொழில் நுட்பமாகும். நிலத்தின் அடியில் உள்ள கூண்டு புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது.

மிக முக்கியமாக மக்காச் சோளத்தை தாக்கும் அமெரிக்க படைப்புழு கட்டுப்படுத்தப்படுகிறது. பூச்சி நோய் தாக்குதல் பெருமளவு குறையும். வயல்வெளிகளில் பெய்யும் மழை நீரை சேமிப்பதில், கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கோடை உழவு செய்த பின் விதைப்புக்கு தேவையான விதைகள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி வட்டார விவசாயிகள் வேளாண்மை விரிவாக்கம் மையத்தை அணுகி பயன்பெறுமாறு குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மலர்வண்ணன் தெரிவித்துள்ளார்.

The post பயிர்கள் செழிக்க கோடை உழவு appeared first on Dinakaran.

Related Stories: