அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

தஞ்சாவூர்: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தமிழகத்தில் வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே பள்ளிகளை சுத்தப்படுத்துதல், வளாகத்தில் புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பின் எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற முழு விவரம் தெரியவரும். முதலமைச்சரின் வானவில் மன்றம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு தகுந்தாற்போல் படிப்படியாக நிறைவேற்றப்படும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: