பல்வேறு அரசு சேவைகள் டிஜிட்டல் மயம் அனைத்து கிராமங்களுக்கும் விரைவான இன்டர்நெட்: தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் தீவிரம்; ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.14 லட்சம் ஒதுக்கீடு

வேலூர்: அரசு சேவைகள் டிஜிட்டல் மயமாக மாறி உள்ளதால், தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் விரைவான இன்டர்நெட் சேவை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ் பைபர் நெட் கார்ப்பரேஷன் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இதற்காக கேபிள்கள் மின்பாதையை ஒட்டி அமைகிறது. தமிழகத்தில் 38 மாவட்டங்களுக்கு உட்பட்ட 385 ஊராட்சி ஒன்றியங்களில் 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகள் அனைத்தும் ஏற்கனவே கணினிமயமாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் அனைத்து வரி கட்டண இனங்களும் ஆன்லைன் மூலமே கட்டப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டார சேவை மையங்களும், கிராம ஊராட்சி அளவில் சேவை மையங்களும் இயங்கி வருகின்றன. இந்த சேவை மையங்கள் மூலம் கிராமப்புற மக்கள், வருவாய்த்துறை, வேளாண்துறை உட்பட பல்வேறு அரசுத்துறை திட்டங்கள், மானியங்கள் பெற அருகில் உள்ள நகரங்களுக்குசென்று விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து சமர்ப்பித்து வந்தனர். மேலும் மின்கட்டணம் உட்பட கட்டணங்களை செலுத்தவும் கிராமங்களில் வசதியில்லாமல் இருந்தது. இதனால் தாலுகா அலுவலகங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டன.

இம்மையங்கள் மூலம் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் முறையை அரசு செயல்படுத்தியது. இம்மையங்களில் இருப்பிடச்சான்று, வருவாய் சான்று, சாதி சான்று ஆகியவற்றுக்கு விண்ணப்பித்தல் மற்றும் விவசாயிகளுக்கு கம்ப்யூட்டர் சிட்டா, பட்டா மாறுதல் போன்ற வருவாய்த்துறை சார்ந்த பணிகள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இச்சேவையை விரிவுபடுத்தும் வகையில் அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இம்மையங்கள் மூலம் அரசுத்துறைகள் சார்ந்த திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல், கிராமப்புற வேைல உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கான சேவைகளை வழங்கவும், ரயில் டிக்கட் முன்பதிவு போன்ற சேவைகளையும் வழங்க திட்டமிடப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.14 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது அனைத்து கிராம ஊராட்சிகளிலும் விரைவான இன்டர்நெட் சேவை கிடைக்கும் வகையில் பைபர் கேபிள்கள் மூலம் வட்டார சேவை மையங்களும், ஊராட்சி சேவை மையங்களும் இணைக்கப்படுகின்றன. இந்த கேபிள்கள் மின்பாதையை ஒட்டி அமைகிறது. இதன் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி கிடைக்கும். இந்த பணியில் தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் இத்திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.

ஊராட்சி சேவை மையங்களை சுற்றி 3 கி.மீ தொலைவுக்குள் உள்ள அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில் உள்ள இணையதள வசதியுடன் கூடிய கணினிகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. இது முடிந்தவுடன் அந்த அலுவலகங்கள் வட்டார, கிராம ஊராட்சி சேவை மையங்கள் பைபர் கேபிள் மூலம் இணைக்கப்படும். இதன் மூலம் கிராம ஊராட்சி சேவை மையங்களின் திறன் மேம்பாடு அடைவதுடன், அனைத்து கிராம ஊராட்சிகளும் விரைவான இணையதள வசதியை கொண்டதாக உருவாகும் என்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பல்வேறு அரசு சேவைகள் டிஜிட்டல் மயம் அனைத்து கிராமங்களுக்கும் விரைவான இன்டர்நெட்: தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் தீவிரம்; ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.14 லட்சம் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: