மணிப்பூர் கலவரத்தால் நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் இன்ஜினியரிங் அரசு ஒதுக்கீடு இடத்தை வீணாக்காதீர்கள்: மாணவர்களுக்கு கல்வியாளர்கள் அறிவுரை

* சிறப்புச்செய்தி
சென்னை மணிப்பூர் கலவரத்தால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பொறியியல் அரசு ஒதுக்கீடு இடங்களையும், பணத்தையும் வீணாக்காதீர்கள் என மாணவர்களுக்கு கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எம்பிபிஎஸ், பி.டி.எஸ், சித்தா உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே 7ம் தேதி மணிப்பூர் மாநிலம் தவிர நாடு முழுவதும் நடந்தது. தமிழ், ஆங்கிலம் உள்பட 11 மொழிகளில் நடத்தப்பட்ட தேர்வை 18,72,341 மாணவ, மாணவிகள் எழுதினர். கடும் சோதனைகளுக்கு பிறகே அனைவரும் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கம்மல், வாட்ச், முழுக்கை சட்டை அணிந்து செல்லக்கூடாது எனக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நாடு முழுவதும் 499 நகரங்களில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5.20 மணிக்கு முடிந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சுமார் 1.47 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு குறித்து பேசிய மாணவர்கள், ‘இயற்பியல் கடினமாகவும் வேதியியல் நடுத்தர அளவிலும், உயிரியல் எளிமையாகவும் இருந்ததாக தெரிவித்திருந்தனர்.

மணிப்பூர் கலவரம்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தி என்ற சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். மெய்தி சமூகத்தவரை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் பழங்குடியினர் போராட்டங்களை நடத்தி வந்தனர். பழங்குடியினருக்கும் மெய்தி சமூகத்தினருக்கும் இடையே மே 3ம் தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது. இது, பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அசாதாரண சூழலில் வன்முறையை கட்டுப்படுத்த, கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் நடக்க இருந்த நீட் தேர்வுகள் மணிப்பூரில் நடக்குமா என கேள்வி எழுந்தது. மணிப்பூரில் சட்டம் -ஒழுங்கு பிரச்னை காரணமாக மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று மே 7ம் தேதி நடக்க இருந்த நீட் தேர்வை ஒத்திவைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது. ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மணிப்பூரில் தற்போதுள்ள சூழலில், மாணவர்களால் நீட் தேர்வில் கலந்துகொள்ள முடியாது. இணையதள இணைப்பு பிரச்னை ஏற்படும். அதனால், தேசிய தேர்வு முகமையிடம் தேர்வு தேதியை மாற்றி அறிவிக்கவோ அல்லது தள்ளி வைக்கவோ செய்யும்படி கேட்டு கொண்டேன். அதன்படி தேர்வு தள்ளிவைப்பு பற்றிய அறிவிப்பை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது’’ என தெரிவித்திருந்தார்.

தேர்வு முடிவு தாமதம்: தற்போது வரை மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் அந்த மாநிலத்தில் நீட் தேர்வு எப்போது நடைபெறும் என்று தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரை பொறுத்தவரையில் 4 ஆயிரம் தேர்வர்கள் தேர்வுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், நீட் தேர்வை பொறுத்தவரையில் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, ஒரே நேரத்தில் கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால், தற்போது இந்த ஒரு மாநிலம் மட்டும் தேர்வை நடத்ததால் ஒட்டுமொத்த மாணவர்கள் தங்கள் மருத்துவ கனவை எட்டுவதில் சிக்கல் நிலவுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கி விட்டனர். பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவும் நாளையுடன் நிறைவடைய உள்ளது. இதை தொடர்ந்து, ஜூலை 2ம் தேதி கலந்தாய்வு தொடங்க உள்ளது.

இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், ‘‘நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பலரும் பிளான் பி வைத்துள்ளனர். அதுதான் பொறியியல் படிப்பு. ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு முடிவு வெளியான பின்பு பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விடுகிறது. ஏனென்றால் மருத்துவத்தில் தனக்கான இடம் கிடைத்தவுடன் பொறியியலை கைவிட்டு சென்று விடுகின்றனர். இந்த வருடமும் அதேதான் நடக்கும். ஆனால் மணிப்பூரில் நீட் தேர்வு நடக்காத காரணத்தால் தேர்வு முடிவுகள் தாமதமாகும். நீட் கலந்தாய்வு நடைபெறாததால் துணை மருத்துவ படிப்பும் பாதிக்கப்படும். எனவே இந்த வருடம் மருத்துவ கனவில் இருக்கும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் மிகவும் பாதிக்கப்படுவார்கள்’’ என்றார்.

கல்வியாளர் ராஜ ராஜன் கூறுகையில், ‘‘அனைத்து கலந்தாய்வுகளும் ஒரே நேரத்தில் நடத்தினால் மட்டுமே அரசு பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதை தவிர்க்க முடியும். நீட் தேர்வு முடிவு தாமதத்தால் அரசு பொறியியல் கல்லூரிகள் தான் பாதிக்கப்பட போகின்றன. ஆனால் நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களுக்கு ஒரு பாதிப்பும் ஏற்பட போவதில்லை. நீட் தேர்வு முடிவு வெளிவந்த பின்னர், மருத்துவம் செல்ல விரும்பும் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை அண்ணா பல்கலை திரும்ப கொடுத்துவிடும். ஆனால் நிகர்நிலைப்பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகள் பணத்தை திரும்ப கொடுப்பார்களா என்பது சந்தேகம் தான். இதனால் பெற்றோர்களும் தங்கள் பணத்தை இழந்து தவிப்பார்கள்.

எனவே மாணவர்கள் தங்களுக்கான சரியான இடத்தை தேர்ந்தெடுங்கள். பணத்தை வீணாக்காதீர்கள். மேலும் மருத்துவம்தான் உங்கள் கனவு என்றால் அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களையும் வீணாக்காதீர்கள். பொறியியல்தான் கனவு என்று இருக்கும் மாணவர்கள், போதிய பணம் இல்லாமல் அரசு இடஒதுக்கீட்டில் செல்வதற்கு காத்திருப்பார்கள். மருத்துவ கனவில் உள்ள நீங்கள் அவர்களுக்கு கிடைக்கவிருக்கும் இடத்தை பறித்து, பின்னர் நீங்களும் அதில் படிக்காமல் நீட் தேர்வு முடிந்ததும் சென்று விட்டால், அதற்குள் வேறு வழியின்றி தனியார் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள பணத்தையும் திரும்ப பெற முடியாமல், அரசு கல்லூரியிலும் சேர முடியாமல் அவதிப்படுவார்கள். எனவே உங்களுக்கான எதிர்காலம் என்ன என்பதில் கவனமாக இருங்கள்’’ என்றார்.

The post மணிப்பூர் கலவரத்தால் நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் இன்ஜினியரிங் அரசு ஒதுக்கீடு இடத்தை வீணாக்காதீர்கள்: மாணவர்களுக்கு கல்வியாளர்கள் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: