தேனி, சின்ன மம்மி, குக்கர் கல்யாண வீட்டில் ஒன்றாக சந்திக்க திட்டம் போட்டிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘திருமண விழாவில் தேனிக்காரர், சின்னமம்மி, குக்கர் மூவரும் இணைந்து சந்திக்க முடிவு பண்ணியிருக்காங்களாமே.. விரிவா சொல்லுங்க..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் சேலம்காரர், தேனிக்காரர் என 2 அணியாக செயல்பட்டு வர்றாங்க. சேலம்காரருக்கு கட்சி சின்னம் ஒதுக்கினாலும் இன்னும் இரண்டு தரப்பிலும் முடிவுக்கு வராத நிலைதான் தற்போது இருந்து வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் தேனிக்காரர் தனது ஆதரவாளர்களுடன் குக்கர் தலைமையை நேரில் சந்தித்தார். இதில் இருவரும் பரஸ்பரம் செய்து கொண்டனர். இதே போல் சின்னமம்மியையும் விரைவில் சந்திப்பேன். அதுவும் டெல்டா மாவட்டத்தில் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் சந்திப்பதற்கான வாய்ப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

நெற்களஞ்சியம் மாவட்டத்தில் தேனிக்காரரின் ஆதரவாளரான மாஜி அமைச்சர் வைத்தியானவரின் இல்லத்திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும்படி சின்னமம்மி, குக்கர் தலைமைக்கு வைத்தியானவர் அவரது குடும்பத்தோடு நேரில் சென்று பத்திரிகை கொடுத்து அழைப்பு விடுக்க உள்ளார். இந்த இல்ல திருமண நிகழ்ச்சியில் தேனிக்காரர், சின்னமம்மி, குக்கர் தலைமை ஆகியோர் ஒன்றாக இணைந்து சந்திக்க காத்திருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து நெற்களஞ்சியம் மாவட்டத்திலே 3 பேரும் ஒன்றாக இணைந்து பெரிய அளவில் பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளார்களாம். அதற்கான முயற்சியில் ‘வைத்தியானவர்’ தீவிரமாக இறங்கியுள்ளார்.

இந்த பொதுக்கூட்டம் மூலம் நெற்களஞ்சியம் மாவட்டத்தில் தங்களது செல்வாக்கை நிரூபிக்க 3 பேரும் முடிவு செய்துள்ளனர். விரைவில், பொதுக்கூட்டத்திற்கான தேதியும் அறிவிக்கப்பட உள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வேட்பாளரா நிக்குறீங்களான்னு கேட்டா ஓட்டம் பிடிக்கிறாங்களாமே பாஜ நிர்வாகிகள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகியவை இணைந்தது புதுச்சேரி ஒன்றியமாகும். 30 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டு ஒரே ஒரு புதுச்சேரி மக்களவை தொகுதியாகும். இங்கு என்ஆர்காங்கிரஸ்-பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அதிக சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற என்ஆர்காங்கிரஸ், ராஜ்ய சபா எம்பி பதவியும் பாஜவுக்கு விட்டு கொடுத்துவிட்டது.

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் பாஜ போட்டியிட ெடல்லி தலைமை அதிக ஆர்வத்துடன் உள்ளது. இதற்கு புல்லட்சாமியை சம்மதிக்க பவர்புல் பெண்மணிக்கு டெல்லி தலைமை அசைமெண்ட் கொடுத்துள்ளது. பாஜவின் மூத்த நிர்வாகிகள், வேட்பாளராக நிற்க உள்துறை அமைச்சர் சிவமானரை கேட்டனர். அவர் மறுத்துவிட்டாராம். அதனை தொடர்ந்து நியமன எம்எல்ஏ லிங்கத்தை நிறுத்த முடிவு செய்தனர். எனக்கு பல பிசினெஸ் இருக்கு இதெல்லாம் வேண்டாம் என அவரும் மறுத்ததால் பல முக்கிய நிர்வாகிகளிடம் அணுகி உள்ளனர். இந்த விஷப்பரீட்சையில் இறங்க வேண்டாம் என அனைவரும் முடிவு செய்து ஓட்டம் பிடிக்கின்றனர். அமைச்சர்கள், எம்எல்ஏக்களிடம் கருத்தை கேட்டறிந்த பொறுப்பு நிர்வாகி, இருக்கவே இருக்கிறார் நமது மாநில தலைவர் சாமி, அவரை நிறுத்தி வெற்றி பெற வைத்து புதிய நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்போம் என கூறியுள்ளார்.

இதனை கேட்ட மற்ற நிர்வாகிகள், அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சேலத்துக்காரரின் சொந்த ஊரில் மதில்மேல்பூனை போன்ற மனநிலையில் மூன்று குரூப் மாஜிக்கள் இருக்காங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சியின் அதிகாரப்போட்டியில் இப்போதைய நிலவரப்படி சேலத்துக்காரரே உரிய இடத்தை பிடிச்சு வச்சிருக்காரு. அவரது சொந்த ஊரில் தேனிக்காரரும், சின்னமம்மியும், குக்கர்காரரும் எப்படியாவது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று செய்த முயற்சிகள் அனைத்தும் நெல்லுக்கு இறைத்த நீர், புல்லுக்கு திரும்பிய கதையாகி விட்டதாம். இதனால் புதிதாக என்ன செய்யலாம் என்று மூணு குரூப்பும் ஆழ்ந்த யோசனையில் இருக்காங்களாம்.

இது ஒருபுறமிருக்க இந்த மூன்று குரூப்பிலும் மம்மியோட கொக்கரக்கோ சின்னத்தில் நின்னு ஜெயிச்சு, அவரோட குட்புக்கில் இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள், மம்மி முன்னிலையில்தான் கல்யாணம் பண்ணுவேன் என்று சொல்லி, இன்னமும் பிரம்மச்சாரியாகவே இருக்கும் மாஜி எம்எல்ஏ என்று ஏகத்துக்கும் விசுவாசிகள் இருக்காங்களாம். இப்படி மம்மியின் தீவிர விசுவாசிகளாக இருக்கும் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க, சேலத்துக்காரரின் ஆதரவாளர்கள் தூண்டில் போட்டுக்கிட்டே இருக்காங்களாம். ஆனால் அவர்கள் சார்ந்திருக்கும் மூணு குரூப்பும் அவர்களை சரியாக கண்டு கொள்ளாமலேயே இருக்காம். இதனால் சேலத்துக்காரர் வீசும் வலையில் எந்த நேரத்திலும் அவர்கள் சிக்கிக் கொள்ளலாம் என்பது உள்ளூர் ரத்தத்தின் ரத்தங்கள் கூறும் ஆரூடம். இதுக்கு தகுந்தது போல், அவங்க மனசும் மதில்மேல் பூனை என்ற மனநிலையில் தான் தவிச்சுகிட்டு இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

The post தேனி, சின்ன மம்மி, குக்கர் கல்யாண வீட்டில் ஒன்றாக சந்திக்க திட்டம் போட்டிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: