அமித்ஷா எச்சரிக்கையை தொடர்ந்து மணிப்பூரில் 140 ஆயுதங்கள் போலீசில் ஒப்படைப்பு

இம்பால்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் எச்சரிக்கையை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வந்த நபர்கள் தங்களிடம் இருந்து ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து வருகின்றனர். மணிப்பூரில் மெய்டீஸ் இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் மெய்டீஸ், குக்கி மக்கள் இடையே மிகப்பெரிய கலவரம் வெடித்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில், 100 பேர் பலியாகினர்.இதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபடுவோர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டது. அமைதியை ஏற்படுத்த ராணுவமும் வரவழைக்கப்பட்டது. சில நாள் அமைதி மீண்டு வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் மீண்டும் வன்முறை வெடித்தது.

பாதுகாப்பு படையினருக்கும் குக்கி தீவிரவாதிகளுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மணிப்பூருக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு சமுதாய தலைவர்களை சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர் கூறுகையில்,‘‘ வன்முறையில் ஈடுபடும் நபர்கள் தாமாக முன்வந்து ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ என எச்சரித்தார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘ அமைச்சரின் எச்சரிக்கையை தொடர்ந்து பலர் தங்களிடம் இருந்து ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து வருகின்றனர். ஏகே ரக துப்பாக்கி, ரைபிள், இலகு ரக இயந்திரதுப்பாக்கி உள்பட 140 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தற்போது அமைதி நிலவுகிறது’’ என்றனர்.

The post அமித்ஷா எச்சரிக்கையை தொடர்ந்து மணிப்பூரில் 140 ஆயுதங்கள் போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: