ரூ.1.20 கோடியில் வடிவமைக்கப்பட்ட விருத்தபுரீஸ்வரர் கோயிலில் புதிய தேர்கள் வெள்ளோட்டம்: ஏராளமானோர் பங்கேற்று தேர் வடம் பிடித்தனர்

விராலிமலை, ஜூன்.2: அன்னவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயிலில் 1.20 கோடி மதிப்பீட்டில் செய்யப்பட்ட புதிய இரட்டை தேர் வெள்ளோட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது இதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று தேர் வடம் பிடித்து வெள்ளோட்டத்தை தொடங்கிவைத்தார்.புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் சிறப்பு பெற்ற விருத்தபுரீஸ்வரர் சமேத தர்மசம்வர்த்தினி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக அக்கோயில் தேர் பழுதானதால் மாசி தேரோட்ட விழாவின் போது விருத்தபுரீஸ்வரர் சமேத தர்மசம்வர்த்தினி மற்றும் அம்பாள் இரண்டு சம்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற விழாவில் உலா வந்த தேர் போல மீண்டும் புதிய தேர் செய்து விழா நடத்தப்பட வேண்டும் என்று ஊர்மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு உபயதாரர்கள் பங்களிப்போடு சுமார் 1.20 கோடி மதிப்பீட்டில் தேர் திருப்பணிகள் கடந்த டிசம்பர் 2020 ம் ஆண்டு தொடங்கியது.

இதில் விருத்தபுரீஸ்வரர் சமேத தர்மசம்வர்த்தினி எழுந்தருளும் தேர் 11-கால் அடியிலும், அம்பாள் எழுந்தருளும் தேர் 9-முக்கால் அடியிலும் உறுதியான மரங்கள் கொண்டு பல்வேறு வேலைபாடுகள் மற்றும் கலைநயத்துடன் நடைபெற்று வந்த பணிகள் தற்போது நிறைவடைந்தது இதையடுத்து தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு துறை அமைச்சர் எஸ். ரகுபதி பங்கேற்று இரண்டு புதிய தேரையும் வடம் பிடித்து தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தருளும் கேடயத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு வெள்ளோட்டம் தொடங்கியது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்தனர்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்,விழா கமிட்டியினர், உபயதாரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post ரூ.1.20 கோடியில் வடிவமைக்கப்பட்ட விருத்தபுரீஸ்வரர் கோயிலில் புதிய தேர்கள் வெள்ளோட்டம்: ஏராளமானோர் பங்கேற்று தேர் வடம் பிடித்தனர் appeared first on Dinakaran.

Related Stories: