தஞ்சாவூர் ராஜாளி பூங்காவில் அலை மோதிய கூட்டம் கொஞ்சும் கிளிகளிடம் கொஞ்சி மகிழ்ந்த மக்கள்

தஞ்சாவூர், ஜூன் 2: விடுமுறை தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் ராஜாளி பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியதுடன் கொஞ்சும் கிளியை கையில் ஏந்தி பொதுமக்கள் கொஞ்சி மகிழ்ந்தனர்.தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்போது பழைமை மாறாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.8.4 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அதன் பின்புறம் ராஜாளி கிளி பூங்காவும் புதிதாக கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

அந்த பூங்காவில் நிறைய வெளிநாட்டு பறவைகள் வளர்க்கப்படுகின்றன. அங்கு பறவைகளுக்கான உணவை நம் கைகளில் வைத்திருந்தால் அந்த பறவைகள் நம் கைகள் மீது உட்கார்ந்து தன் அலகுகளால் நமக்கு வலிக்காமல் கொத்தி தின்று செல்லும். அந்த பூங்காவில் 20 நாடுகளை சேர்ந்த 300க்கும் அதிகமான அரிய வகை பறவைகள், நெருப்பு கோழி, வாத்துக்கள், முயல்கள், முள் எலி, நாய் வகைகள், கின்னி கோழி, வான்கோழி, காடைகள், ஆமைகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. இதனால் சமீப காலமாக அங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ராஜாளி கிளி பூங்காவிற்கு குடும்பத்துடன் சென்று நேரத்தை கழித்து வருகிறார்கள். எனவே தற்போது பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அங்கு அதிக அளவில் பொதுமக்கள் வருகின்றனர்.

வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு தஞ்சை ராஜாளி பறவைகள் பூங்கா அமைந்துள்ளது. அதேபோல் அருங்காட்சியகத்தில் வேளாண் துறை சார்பில் பழமையான வேளாண் கருவிகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளின் செயல்பாடுகள் குறித்த தத்ரூபமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில், நவதானியங்கள், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட பெரிய கோவில் மாதிரிகள் உள்ளன. மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால உலோக சிற்ப காட்சியகம், கற்சிற்ப காட்சியகம், சரஸ்வதி மஹால் நுாலக காட்சியகம், ‘7 டி’ திரையரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.20, சிறுவர்களுக்கு ரூ.10, 7 டி திரையரங்கத்திற்கு ரூ.75, பறவைகள் பூங்காவிற்கு ரூ.150 , மேலும் 3 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு டிக்கெட் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு அழகான செயல் பூங்காவிற்கு வரும் அணைவரின் மனதையும் நெகிழ வைக்கிறது. குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

The post தஞ்சாவூர் ராஜாளி பூங்காவில் அலை மோதிய கூட்டம் கொஞ்சும் கிளிகளிடம் கொஞ்சி மகிழ்ந்த மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: