கொரநாட்டுக்கருப்பூரில் பெட்டி காளியம்மன் கோயிலில் தேரோட்டம்

கும்பகோணம், ஜூன் 2: கும்பகோணம் அருகே கொரநாட்டுக்கருப்பூரில் பல விநோத வழிபாட்டு முறைகள் கொண்ட பெட்டி காளியம்மன் ஸ்தலமான அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரசுவாமி கோயிலில் தற்போது ரூ.75 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட புதிய தேரில் உற்சவர் சுவாமி அம்பாள் எழுந்தருள, திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இத்தலத்தில் பிரம்மன், இந்திரன், குபேரன் உள்ளிட்ட தேவர்களும், அகத்தியர், சுரதன் உள்ளிட்ட முனிவர்களும் வழிபட்டு தங்கள் சாப விமோசனம் பெற்றுள்ளனர். இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என போற்றப்படுகிறது. இதில் நீராடினால் பல யாகங்கள் செய்த பலன்கள் உண்டு என்பது ஐதீகம். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் விசாக நட்சத்திர தினத்தில் திருத்தேரோட்டம் என்பது கடந்த 1943ம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திருத்தேரின் பெரும்பாலான பகுதிகள் மிகவும் சிதிலமடைந்து, சக்கரங்கள் பழுதடைந்து தேரோட்டம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் சுமார் 80 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன், உபயதாரரின் ஏற்பாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய திருத்தேர் பணி தொடங்கி தற்போது சுமார் 24 டன் எடையில், 16 அடி உயரம், 14 அடி அகலம் மற்றும் 16 அடி நீளத்தில் இப்புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேர் அலங்கரிக்கப்பட்ட நிலையில் 37 அடி உயரத்தில் காட்சியளிக்கும். இந்த சைவத்திருத்தலத்தில் தற்போது 80 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாகப்பெருவிழா கடந்த 24ம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று, உற்சவர் சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருள, திருத்தேரோட்டம் நடைபெற்றது.

உபயதாரர் சென்னை மதி மகாலட்சுமி சுப்பிரமணியன், இந்து சமய அறநிலைத்துறை கும்பகோணம் உதவி ஆணையர் சாந்தா, தக்கார் வெங்கடசுப்பிரமணியன் ஆய்வாளர்கள் சத்யா மற்றும் கோகிலா தேவி, முன்னாள் எம்எல்ஏ ராமநாதன், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி, நில வங்கி தலைவர் சோழபுரம் அறிவழகன், முன்னாள் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் அழகு.சின்னையன், ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சுதா அம்பிகாபதி, செயல் அலுவலர் கணேஷ்குமார், விழா ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, லோக செல்வம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். 80 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த புதிய திருத்தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கொரநாட்டுக்கருப்பூரில் பெட்டி காளியம்மன் கோயிலில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: