விழுப்புரம், ஜன. 12: விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே கண்டமானடியை சேர்ந்தவர் பாபு (46). இவர் பேக்கரியில் வேலை செய்து வந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. வைஷாலி (20), வைஷ்ணவி (16) என்ற 2 மகள்கள் உள்ளனர். வைஷாலி நர்சிங் படித்து விட்டு வீட்டில் இருக்கிறார்.
வைஷ்ணவி தற்போது அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 17ம் தேதி குடிபோதையில் பாபு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது 2வது மகள் வைஷ்ணவியை அழைத்து சாப்பாடு எடுத்து வைக்குமாறும், குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் வைஷ்ணவி வீட்டு வேலை செய்யாமல், சாப்பாடும் செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த பாபு மகள் என்றும் பாராமல் வைஷ்ணவியை காலால் எட்டி உதைத்து அவரை சுவற்றில் பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தாய் ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் பாபு மீது விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைஷ்ணவி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தாலுகா காவல் நிலைய போலீசார், பாபு மீது கொலை முயற்சி வழக்கை கொலை வழக்கமாக மாற்றி பதிவு செய்தனர். தொடர்ந்து பாபுவை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
