வாலாஜாபாத் பேருந்து நிலையத்திற்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில், இருக்கை வசதிகள் ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில் ஒன்றிய அலுவலகம், ரயில் நிலையம், தாலுகா அலுவலகம், நூலகம், வங்கிகள், சர்பதிவாளர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், தபால் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இவை மட்டுமின்றி வாலாஜாபாத்தை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் வாலாஜாபாத் வந்துதான் காஞ்சிபுரம், ஒரகடம், பெரும்புதூர், செங்கல்பட்டு, சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். இந்நிலையில் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் கிராமப்புற பேருந்துகளுக்காக நாள்தோறும் காத்திருப்போர் அதிகம். இதுபோன்ற சூழ்நிலையில் பேருந்து நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக போதிய இருக்கை வசதியின்றி நாள்தோறும் பேருந்து பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வாலாஜாபாத் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ளவர்கள் வாலாஜாபாத் வந்து இங்கிருந்து பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகிறோம். காஞ்சிபுரத்திலிருந்து கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் வாலாஜாபாத் பேருந்து நிலையத்திற்கு வந்துதான் பல்வேறு கிராமப்புறங்களுக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் பெரும்பாலானோர் பேருந்துகளுக்காக நாள்தோறும் மணிக்கணக்காக காத்திருக்கின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால், ஆபத்தான நிலையில் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் உள்ள திண்ணையில் வரிசையாக கிராம மக்கள் அமைந்துள்ளனர். இதனால், ஒருசில நேரங்களில் பேருந்து திரும்பும்பொழுது விபத்துக்குள்ளாகும் சூழலும் நிலவுகிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு, இந்த பேருந்து நிலையத்திற்கு போதிய இருக்கை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வாலாஜாபாத் பேருந்து நிலையத்திற்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: