இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் கோயில் தீர்த்த பிரசாதம் ஆன்லைனில் விற்பனை: இந்தியா முழுவதும் அஞ்சல்துறை மூலம் சேவை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் தீர்த்த பிரசாதங்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அஞ்சல்துறை மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்குள் மகாலட்சுமி தீர்த்தம் முதல் கோடி தீர்த்தம் வரை மொத்தம் 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. குறிப்பாக 22வது தீர்த்தமான கோடி தீர்த்தத்தில் நீராடுவதன் மூலம் அனைத்து தீர்த்தங்களையும் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ராமநாத சுவாமி கோயில் தேவஸ்தானம் சார்பாக பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கோடி தீர்த்தம் பாட்டிலில் விற்பனை துவங்கப்பட்டது. இதனை பக்தர்கள் வாங்கி சென்று பக்தர்கள் வீடு, கடை, தொழில், வர்த்தக நிறுவனங்களில் பூஜை உள்ளிட்ட அனைத்து காரியங்களுக்கும் பயன்படுத்துவார்கள்.

இந்நிலையில் தனியார் நிறுவனம் மற்றும் தனிநபர்கள் ராமேஸ்வரம் கோயில் பிரசாதங்களை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த வருவதாக புகார் எழுந்தது. இதனால் அஞ்சல் துறையின் சார்பில் புனித கங்கை தீர்த்தம் இந்தியா முழுவதும் விற்பனை செய்வது போல ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் கோடி தீர்த்தம் பிரசாதங்களை அஞ்சல் துறை மூலம் வெளியிட வேண்டும் என பக்தர்களின் கோரிக்கை தொடர்ந்து எழுந்தது. இதனால் உடனடியாக ஆன்லைன் வர்த்தக இணைய தளங்களில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் கோடி தீர்த்தம் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டது.

தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்திய அஞ்சல் துறை மூலம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் கோடி தீர்த்தம் 100 மி.லி செப்பு கலசத்தில் அடைத்தும், 100 கிராம் இனிப்பு, ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் படம், விபூதி, குங்குமம் அடங்கிய பிரசாதங்கள் ஆன்லைன் வாயிலாக விற்பனை நடைபெற்று வருகிறது. இதன் விலை ரூ.145 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் செலவு தனி. இதற்கான கட்டணத்தை பக்தர்கள் என்ற www.tnhrce.gov.in என்ற இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் செலுத்தினால் அஞ்சல்துறையின் சார்பாக பக்தர்களின் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும் என ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலம் பக்தர்கள் தீர்த்த பிரசாதங்களை அஞ்சல் துறை மூலம் பெற்றுக் கொள்வது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

The post இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் கோயில் தீர்த்த பிரசாதம் ஆன்லைனில் விற்பனை: இந்தியா முழுவதும் அஞ்சல்துறை மூலம் சேவை appeared first on Dinakaran.

Related Stories: