மாவட்டத்தில் ₹398.44 கோடியில் 8 சாலை பணிகள்

தர்மபுரி, ஜூன் 1: தர்மபுரி மாவட்டத்தில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சுமார் 8 பணிகள் 49.80 கிலோ மீட்டர் தூரத்திற்கு, ₹398.44 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டம், மலை கிராமங்கள் மற்றும் வனக்கிராமங்கள் அதிகம் உள்ள மாவட்டமாக உள்ளது. கிராமங்களின் வளர்ச்சியில் சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு கிராமங்களில் விளையும் காய்கறி, பழங்கள் நகரத்திற்கு வாகனங்களில் கொண்டு வரப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள், தினசரி சாய்கறி மார்க்கெட், வாரச்சந்தைகள், தக்காளி மார்க்கெட்டிற்கு கிராமப்புற சாலைகளின் வழியாக தான் விளைபொருட்கள் கொண்டு வரப்படுகிறது. கடந்த 10 மாதத்திற்கு முன்பு வத்தல்மலைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல், மலையூருக்கும் பஸ் வசதி கேட்டு, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையொட்டி சமீபத்தில் அதிகாரிகள் பஸ் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தினர். ஆனாலும், சில முக்கிய இடங்களில், சாலை குறுகலாக இருப்பதால், பாதுகாப்பான பயணத்திற்கு சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஏற்படுத்திய பின்னர், மலையூருக்கு பஸ் வசதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், ‘இந்தியாவில் 33 லட்சம் கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது உலக அளவில் 2வது இடமாகும். இந்தியாவின் 65 சதவிகித சரக்கு போக்குவரத்தும், 80 சதவிகித மக்கள் போக்குவரத்தும் சாலைகளின் மூலமே நடைபெறுகின்றன. தேசிய நெடுஞ்சலைகள் நாட்டின் ஒட்டுமொத்த சாலைகளில் 1.7 சதவிகிதம் மட்டுமே. ஆனால், நாட்டின் ஒட்டுமொத்த சரக்கு பரிமாற்றத்தில், 40 சதவிகிதம் சாலைகளின் வழியே நடைபெறுகின்றன,’ என்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகள், கிராம சாலைகள் என ஐந்து வகையாக உள்ளன. நாட்டின் பெரிய நகரங்கள், மாநில தலைநகரங்கள், முக்கிய பொருளாதார மண்டலங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை இணைப்பது தேசிய நெடுஞ்சாலைகளாகும். இவை இந்திய தேசிய நெடுஞ்சாலை பொறுப்பு ஆணையத்தால் (நகாய்) நிர்வகிக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள் இருவழிப்பாதை, நான்கு, ஆறு மற்றும் எட்டுவழி சாலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதே போல், மாநிலங்களுக்குள்ளே முக்கிய நகரங்களையும், மாவட்ட தலைநகரங்களையும் இணைப்பவை மாநில நெடுஞ்சாலைகள் ஆகும்.

இவற்றை மாநில பொதுப்பணித்துறை அமைச்சகங்கள் கட்டமைத்து பராமரிக்கின்றன. விரைவுச்சாலைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை விட, அதிக வசதிகளைக் கொண்டவை. 6 அல்லது 8 வழிகளைக்கொண்ட இவை, விரைவாக பயணம் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டவை. மாவட்டத்திற்குள் அமைந்துள்ள தாலுகா தலைமையகங்களையும், முக்கிய இடங்களையும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளோடு இணைக்கிறது. இவற்றை மாவட்ட அளவிலான நிர்வாகம் கட்டமைத்து பராமரிக்கிறது. கிராமங்களை அருகிலுள்ள நகரங்களோடு இணைக்கும் சாலைகள் கிராம சாலைகள் ஆகும். இவற்றை உள்ளாட்சி அமைப்புகளான கிராம சபைகளும், நகராட்சிகளும், பேரூராட்சிகளும் கட்டமைத்து பராமரிக்கின்றன.

தர்மபுரி நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில், கடந்த 2021-2022ம் ஆண்டில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 65 பணிகள், 134.03 கிலோ மீட்டர் நீளத்திற்கு ₹489.46 கோடி மதிப்பீட்டில் பணிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 56 பணிகள் 84.23 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது. மேலும், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சுமார் 8 பணிகள் 49.80 கிலோ மீட்டர் நீளமுள்ள ₹398.44 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. 2022-2023ம் ஆண்டில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 35 பணிகள் 59.028 கிலோ மீட்டர் நீளத்திற்கு ₹70.25 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மாவட்டத்தில் ₹398.44 கோடியில் 8 சாலை பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: