30 ஆண்டுகளாக அளித்த மனுக்களை தலையில் சுமந்து வந்தவரால் ஜமாபந்தியில் பரபரப்பு

திருக்கழுக்குன்றம், ஜூன் 1: திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு, 30 ஆண்டுகளாக அளித்த மனுக்களை தலையில் சுமந்து வந்தவரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் தொடங்கிய ஜமாபந்தி நேற்று 2வது நாளாக நடந்தது. இதில், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்பட்ட மணமை, வடகடம்பாடி, குழிப்பாந்தண்டலம், பூஞ்சேரி, எச்சூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் தாங்கள் கொண்டு வந்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி ஆகியோரிடம் அளித்தனர்.

அப்போது, மணமை ஊராட்சி முன்னாள் தலைவர் வீராசாமி என்பவர் 500க்கும் மேற்பட்ட மனுக்களை தலையில் சுமந்தபடி மனு அளித்தார். அந்த மனுவில் மணமை ஊராட்சியில் அரசு நீர்நிலைகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்து உரிய அனுமதி பெறாமல் சுந்தரமூர்த்தி என்பவர் தனது பினாமியின் பெயரில் இறால் பண்ணை நடத்தி வருவதாகவும், அதற்கு கடந்த 10 ஆண்டுக்கு முன்பு முறைகேடாக அரசு அதிகாரிகள் மின் இணைப்பு அளித்துள்ளதாகவும் அதைஅகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த முறைகேடான இறால் பண்ணைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் தான் 30 ஆண்டுகளாக அளித்த 500க்கும் மேற்பட்ட மனுக்களின் நகல்களை தலையில் சுமந்தவாறு நேற்று மனு அளித்தார். இதனால் ஜமாபந்தியில் பரபரப்பு நிலவியது.

The post 30 ஆண்டுகளாக அளித்த மனுக்களை தலையில் சுமந்து வந்தவரால் ஜமாபந்தியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: