வைபை, இ-நூலகம் உள்ளிட்ட வசதிகளுடன் அதிநவீன முறையில் அமையும் மதுரை கலைஞர் நூலகம்: ஜூன் 15க்கு பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு; பொதுப்பணித்துறை உயர்அதிகாரி தகவல்

* சிறப்பு செய்தி
வைபை, இ-நூலகம் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் ஜூன் 15ம் தேதிக்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு மதுரை கலைஞர் நூலகம் திறக்கப்படும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.
புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதின் மீதும் வாழ்நாள் முழுவதும் தீராப் பற்றினை கொண்டவர் கலைஞர். 2010ம் ஆண்டில் அண்ணாவின் 102வது பிறந்தநாளில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஆசியா கண்டத்தின் அதிநவீன நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் வகையில் இந்த நூலகம் உள்ளது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

இந்நூலகம், 80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் அயராது பணி.. 50 ஆண்டு காலம் சட்டமன்றத்தில் மக்கள் நலனுக்கு குரல் கொடுத்தவர்… 13 முறை அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி.. 5 முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று அரிய பல சாதனைகளை நிகழ்த்தியவரும், எழுத்தாளர், அரசியல், சிறந்த ஆட்சியாளர் என அனைத்து துறையிலும் முத்திரை பதித்த மாபெரும் தலைவர், முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பெருமையை போற்றும் வகையில், மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி மதுரை புதுநந்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடி கட்டிட பரப்பளவில் 7 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதில் நூலகத்தின் கட்டமைப்புக்கு 99 கோடி ரூபாயும், நூலகத்துக்கு தேவையான நூல்கள், மின்நூல்கள் இணையவழி பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை வாங்க ரூ. 10 கோடி, தொழில் நுட்ப சாதனங்கள் கொள்முதல் செய்ய ரூ. 5 கோடி என மொத்தம் ரூ. 114 கோடி ஒதுக்கப்பட்டது.

நூலகத்தின் அடிதளத்தில் வாகன நிறுத்தத்துமிடமும், தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாடு கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவையும் முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை 2 லட்சத்துக்கும் மேலான நூல்களுக்கான பிரிவுகளும் அமைகிறது. அடித்தளம் மற்றும் 7 மாடிகள் கொண்ட இந்த நூலகம் முற்றிலும் குளிரூட்டப்பட்டுள்ளது. மூன்று மாடிகள் வரை கண்ணாடிகளால் ஆன முகப்புத் தோற்றம். அதுமட்டுமில்லால் நூலகத்தில் இலவச வைபை வசதி , 3 எஸ்கலேட்டர், ஆறு லிப்ட் மற்றும் மாடித் தோட்டம் அமைகிறது.

மேலும், சுய சேவை பிரிவு உணவகம், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி அரங்கு, மாற்றுத் திறனாளிகளுக்காக தரைத் தளத்தில் பிரத்யேகப் பிரிவு, பார்வையற்றோர், காது கேளாதோருக்கான மின் மற்றும் ஒலி நூல்கள், 100 நான்கு சக்கர வாகனங்கள் 200 இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த வசதி என மதுரையில் அதிநவீன நூலகம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அடுத்தடுத்த ஆய்வுகள் செய்ததை தொடர்ந்து கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திறக்கப்படும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரை அழைத்து ஜூன் 15ம் தேதிக்கு பிறகு நூலகம், மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரி தகவல் தெரிவித்தார்.

பொதுப்பணித்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில்: மதுரை கலைஞர் நூலகத்தின் கட்டுமான பணிகள் முழுமை அடைந்துள்ளது. மேலும் நூலகத்துக்கு தேவையான புத்தகம், நாற்காலி, மேசை, சோபா உள்ளிட்டவை அந்தெந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. மின்நூலகம், அரங்கம், கட்டிட வடிவமைப்பு உள்ளிட்டவை தற்போதைய கால சூழலுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. தமிழர் பண்பாடு, மாணவர்கள், கல்வியாளர்கள், போட்டி தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள், பள்ளி சிறார்கள்கள் என சமுதாயத்தின் அனைத்துப்பிரிவினருக்கும் ஏற்றவாறு நூலகம் அமைந்துள்ளது. இவ்வாறு பொதுப்பணித்துறை உயர் அதிகாரி தகவல் தெரிவித்தார்.

பிரமாண்டத்திலும் பிரமாண்டம்
* வைபை வசதி, எஸ்கலேட்டர் வசதி, 6 லிப்ட் மற்றும் மாடி தோட்டம்
* 11 மாதத்திற்குள் பிரமாண்டமாக எழும்பிய நூலகம்.
* கலைஞர் எழுதிய நூல்கள் அனைத்தும் தனி ஒரு பகுதியில் வைப்பு.
* ஆராய்ச்சி மாணவர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இது வரபிரசாதமாக அமையும்.
* தமிழ்மொழி, ஆங்கில நூல்கள், குழந்தை நூல்கள், கணிதம், கணினி அறிவியல், பொது நிர்வாகம், பொறியியல், உளவியல், பொருளாதாரம், வேளாண்மை, சுற்றுப்புறச் சூழல், 12,000 அரிய நூல்கள், பருவ இதழ்கள் என பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த 2.50 லட்சம் நூல்கள் இடம் பெற உள்ளன.
* குழந்தைகளுக்கு என விமானம், ராக்கெட் எவ்வாறு இயங்குகிறது என்பதை அனுபவிப்பதற்காக அதன் சிறிய ரக மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர்கள் நேரடியாக பயன்படுத்தலாம்.
* இ-நூலகம் அமைக்கப்பட்டு ஆன்லைனில் கிடைக்கப்படும் புத்தங்கள் அனைத்தையும் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு அதனை படிக்கலாம்.
* தமிழகத்தின் பழங்கால ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டுள்ளது.
* பார்வையாளர்கள் உணவருந்த, பொருட்கள் வைக்க தனித்தனியே அறைகள்.
* லேப்டாப் அல்லது கைபேசி மூலம் படிக்கலாம்.
* கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை என தென் மாவட்ட மக்களுக்கு அறிவொளி வழங்கும் ஓர் கலங்கரை விளக்கமாக இந்த நூலகம் அமைகிறது.

The post வைபை, இ-நூலகம் உள்ளிட்ட வசதிகளுடன் அதிநவீன முறையில் அமையும் மதுரை கலைஞர் நூலகம்: ஜூன் 15க்கு பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு; பொதுப்பணித்துறை உயர்அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: