எம்பி தேர்தலுக்கு ஸ்கெட்ச் போடும் அல்வா மாவட்ட எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சியில் இருந்து தாமரைக்கு தாவியவர், இப்போது எம்எல்ஏ பதவியில் இருந்து எம்பி பதவிக்கு தாவ சீட் கேட்டு வருவது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அல்வா ஊரின் எம்எல்ஏ இலை கட்சியில் இருந்து தேசிய கட்சிக்கு தாவியவர். தேசிய கட்சியில் ஆண்டாண்டு காலமாக இருந்தவர்கள் பலமுறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய போதிலும், அல்வா ஊரின் எம்எல்ஏ சீட்டும் பெற்று எம்எல்ஏவும் ஆகி விட்டார். எல்லாம் இலை கட்சி சவாரி, கூட்டணிதான். மம்மி மறைவிற்கு பிறகு இலை கட்சி தேசிய கட்சியிடம் சரண்டர் ஆகி விட்டதால், மக்களவை தேர்தலிலும் இலை கட்சி – தேசிய கட்சியுடன் கூட்டணி என்பது தெளிவாகி விட்டது. இதை சேலம் காரரும் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால் இதுவரை மாநில அரசியலில் மட்டுமே கோலோச்சி வந்த அல்வா ஊரின் எம்எல்ஏவுக்கு தற்போது ஒன்றிய அரசியலில் திடீர் ஆர்வம். தேசிய கட்சியில் இருப்பதால் எப்படியும் மக்களவை தேர்தலில் சீட் பெற்று விட வேண்டும் என்று துடித்து வருகிறார். இதுவரை இலைமறை காயாக இருந்த தனது எண்ணத்தை சமீபத்தில், கட்சி தலைமை அனுமதி அளித்தால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன் என வெளிப்படுத்தி உள்ளார். இதன் மூலம் அல்வா ஊரின் எம்எல்ஏ அடுத்த மக்களவை தேர்தலுக்கு தயாராகி விட்டார் என தேசிய கட்சியினர் ரசித்தாலும், இலை கட்சியினர் அவரது விருப்பத்தை ரசிக்கவில்லை. ஏற்கனவே ஒரு எம்எல்ஏ சீட்டை பறித்துக் கொண்டவர், தற்போது மக்களவை தேர்தலுக்கும் தொகுதியை கேட்கிறாரே என டென்ஷனில் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி மாவட்டத்துல இரண்டு, மூன்றாம் நிலை அதிகாரிகள் ஜாலியாக இருப்பதை யார் தடுக்க போறாங்க…’’ என்று கேள்வி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாநகர் காக்கி அதிகாரிகளின் மென்மையான நடவடிக்கையினால் கீழ் மட்ட அதிகாரிகளுக்கு ரொம்பவுமே குளிர் விட்டுப்போச்சாம். எரிகிற வீட்டில் பிடுங்கும்வரை லாபம் என்பது போல வசூலில் அள்ளும் எஸ்.ஐக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருதாம். லஞ்ச விவகாரத்தில் சிக்கி சஸ்பெண்ட் ஆனாலும் அவர்கள் கவலைப்படுவதில்லையாம். இவ்வாறு நடவடிக்கைக்கு ஆளான நாலுக்கும் மேற்பட்ட கீழ் மட்ட அதிகாரிகள் தண்டனை காலத்துக்கு பிறகு மீண்டும் மாநகரிலேயே பணியாற்றி வர்றாங்க. ஏற்கனவே மாமூல் வாங்கிய கை அவர்களுக்கு அரிச்சிக்கிட்டே இருக்காம். கண் இமைக்கும் நேரத்திற்குள் பாக்கெட்டை நிறைச்சிட்டு போயிடுறாங்க. காரணம் லஞ்சம் வாங்குபவர்கள் மீதான நடவடிக்கை கடுமையாக இல்லையாம். இதனால, லஞ்சம் வாங்குபவர்களின் ஆட்டம் அதிகரிச்சி போனதா நேர்மையான போலீசார் சொல்றாங்க. சமீபத்துல டவுன் லேடி ஸ்டேசனில் நடந்த வசூலை கணக்கிட்டு பார்த்த அதிகாரிகளுக்கு ஷாக்கா இருக்காம். எனவே வேறுபாடின்றி தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சாட்டையை சுழற்றினால்தான் காக்கி சட்டைக்கு கவுரவம் கிடைக்குமுன்னு விரைப்பான காக்கிகள் பேசிக்கிறாங்க. நேர்மையான அதிகாரியான ஆணையர், விரைவில் சாட்டையை சுழற்றுவார்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தொகுதிப் பக்கமே வராத எம்.பி. மேல மக்கள் கடுப்புல இருக்காங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடந்தாண்டு மே மாதம் தூங்கா நகரில் இருந்து ஹனிபீ நகர் வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை சென்னை வரை விரிவுப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு எழுத்து ஊரில் இருந்து சென்னைக்கு வாரம் இருமுறை ரயில் இயக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்து வருகிறது. இதுவிஷயமாக தேனிக்காரரின் மகனான ஹனிபீ தொகுதி எம்பியை சந்திக்க பொதுமக்கள், சில அமைப்பினர் திட்டமிட்டனர். அவரையோ தொகுதிப் பக்கம் பார்த்தே பல மாதங்கள் ஓடி விட்டதாம். இதனால், தங்கள் குறையினை யாரிடம் முறையிடுவதென ஹனீபீ மாவட்டக்காரங்க முழிச்சிக்கிட்டு இருந்தாங்க. சரி அவருக்கு நெருக்கமானவர்கள் மூலமாக பேசலாம்னு போன் அடிச்சிருக்காங்க. எந்த அழைப்பையும் எம்பி எடுக்கவே இல்லையாம். இலைக்கட்சி பஞ்சாயத்து, வழக்கு பிரச்னை, அமலாக்க பிரிவு பிரச்னை இருக்கிறதால எடுக்க மாட்டேங்கிறாருன்னு சப்பை கட்டு கட்டுறாங்களாம். அப்பா தொகுதியை, மாவட்டத்தை கண்டுக்காம விட்டுட்டாருன்னா, பையனும் அப்படித்தானா.. பெட்டிஷன் கொடுக்க கூட தேடணும் போல…அல்லது விளம்பரம் கொடுக்கணும் போல என மக்கள் புலம்பும் சத்தம் காதில் கேட்கிறது என்கிறார்கள் பொதுமக்கள்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘என்னது ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பா..’’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் அடுத்த இரண்டு மாதங்களில் ஆசிரியர்கள் பலர் ஓய்வு பெறுகிறார்களாம். அவர்களுக்கு மாற்றாக தொடர்புடைய பாட ஆசிரியர்கள் பலர் இருந்தாலும், தங்களது ‘வித்தை’யை பயன்படுத்தி பணி நீட்டிப்பு பெற முயன்று வருகிறார்களாம். இதனால் அரசுக்குத்தான் நஷ்டம். ஓய்வு பெறும் ஆசிரியர்கள் பணி நீட்டிப்பு பெறும் நிலையில் அவர்களுக்கு மாதம் சராசரியாக ரூ.1.50 லட்சம் ஊதியம் வழங்கப்பட்டால் அரசுக்கு ஆண்டுக்கு ஒரு ஆசிரியர் மூலம் ரூ.18 லட்சம் இழப்பு ஏற்படுமாம். இதுபோல் மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் கணக்கிட்டால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும் என்று ஆசிரியர் சங்கங்கள் சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post எம்பி தேர்தலுக்கு ஸ்கெட்ச் போடும் அல்வா மாவட்ட எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: