சாலையில் சென்றவர்களை இழுத்து கட்டாய அதிமுக உறுப்பினர் அட்டை: முகாம் வெறிச்சோடியதால் நிர்வாகிகளை வசைபாடிய மாஜி அமைச்சர்

வந்தவாசி: வந்தவாசியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் வெறிச்சோடியதால் நிர்வாகிகளை முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் வசைபாடினர். இதையடுத்து சாலையில் செல்பவர்களை கட்டாயப்படுத்தி அழைத்து அதிமுக உறுப்பினராக சேர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகர அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று தேரடி பகுதியில் நடந்தது. முகாமிற்கு ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் கே.பாஸ்கர் தலைமை தாங்கினார். முகாமை முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், வடக்கு மாவட்ட செயலாளர் தூசி.கே.மோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது முகாமில் போடப்பட்ட நாற்காலியில் 2 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

அவர்களும் ஒருவர் கட்சிக்காரர், மற்றொருவர் அவருடன் வந்த உறவுக்காரப்பெண். இதனால், ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் இருவரும் நகர செயலாளரை வசைபாடினர். பின்னர் அங்கு இருந்த முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்களை தகாத வார்த்தைகளால் அழைத்து, வருவோர், போவோரை கூட்டி வந்து உறுப்பினர் ஆக்குங்கள் என கூறி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்த அதிமுகவினர், சாலையில் செல்லும் பொதுமக்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்து உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். அப்படியும் 2 இலக்க எண்ணிக்கையில் மட்டுமே சேர்க்க முடிந்ததாம். எப்போதும் அதிமுகவிற்கு ஆதரவு இருந்த தேரடி பகுதியில் அதிமுகவில் உறுப்பினராக சேர்வதற்கு யாரும் ஆர்வம் காட்டாததால் நிர்வாகிகள் அப்செட் ஆனார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சாலையில் சென்றவர்களை இழுத்து கட்டாய அதிமுக உறுப்பினர் அட்டை: முகாம் வெறிச்சோடியதால் நிர்வாகிகளை வசைபாடிய மாஜி அமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: