நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கேரள அரசு: பணியில் இருந்து இன்று ஒரே நாளில் 11,801 அரசு ஊழியர்கள் ஓய்வு

திருவனந்தபுரம்: கேரள அரசு பணியில் இருந்து இன்று ஒரே நாளில் 11,801 ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கு பணப்பலனாக 1500 கோடிக்கு மேல் கொடுக்க வேண்டும் என்பதால் ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அரசுக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் வருவாயில் பெரும்பங்கு அரசு ஊழியர்களுக்கு சம்பளம், சலுகைகள் கொடுப்பதற்காகவே செலவிடப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் மிகவும் தாமதமாகவே வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள அரசுக்கு கொடுக்க வேண்டிய கடன் வரம்புக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு விதித்தது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கேரள அரசு பணியில் இருந்து இன்று ஒரே நாளில் 11,801 ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். சுகாதாரம், கல்வி, வருவாய் ஆகிய துறைகளில் இருந்து தான் பெருமளவு ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இவ்வாறு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பண பலன்களாக கொடுக்க வேண்டிய தொகை ₹1500 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஊழியருக்கும் குறைந்தது ₹15 லட்சம் முதல் ₹80 லட்சம் வரை கொடுக்க வேண்டும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் கேரள அரசால் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உரிய பண பலன்களை கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்களுக்கான பண பலன்களை கொடுப்பதற்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் யாருக்கும் கொடுக்க வேண்டிய பணத்தை நிறுத்தி வைக்க மாட்டோம் என்றும் கேரள நிதித்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கேரள அரசு: பணியில் இருந்து இன்று ஒரே நாளில் 11,801 அரசு ஊழியர்கள் ஓய்வு appeared first on Dinakaran.

Related Stories: