போராடும் மல்யுத்த வீராங்கனைகள் பொறுமை காக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் வேண்டுகோள்..!

டெல்லி: பாலியல் புகார் விசாரணை முடியும் வரை மல்யுத்த வீராங்கனைகள் காத்திருக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பாஜ எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங், மைனர் பெண் உட்பட மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, பிரிஜ் பூஷணை கைது செய்யக் கோரி, ஒலிம்பிக்சில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறிய நிலையில், ஐந்து மாதங்கள் நெறுங்கியும் தற்போதும் நீடித்து வருகிறது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மல்யுத்த வீரர்கள் நேற்று தங்கள் கடின உழைப்பால் நாட்டிற்காக ஈன்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச முடிவெடுத்தனர். தகவல் அறிந்த பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய தலைவர் நரேஷ் திகைத் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவர்கள் மல்யுத்த வீரர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஒன்றிய அரசுக்கு 5 நாள் கெடு விதிப்பதாகவும், அதற்குள் பிரஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், பதக்கத்தை கங்கையில் வீசுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; பாலியல் புகாரில் டெல்லி காவல்துறை விசாரணையை முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். போராடும் மல்யுத்த வீராங்கனைகள் பொறுமை காக்க வேண்டும், பிரிஜ் பூஷனுக்கு எதிராக நடக்கும் விசாரணையை நம்ப வேண்டும். விளையாட்டு போட்டிகளின் நன்மதிப்பை குறைக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. வளரும் வீரர்கள், விளையாட்டுத் துறையை பாதிக்கும் முடிவினை மேற்கொள்ளக் கூடாது. விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக இருப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

The post போராடும் மல்யுத்த வீராங்கனைகள் பொறுமை காக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் வேண்டுகோள்..! appeared first on Dinakaran.

Related Stories: