புகைபிடித்தலுக்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட வேண்டும்: ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: புகைபிடித்தலுக்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. புகை பிடித்தலுக்கு எதிரான வாசகத்தை வெளியிடாத ஓடிடி தளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிகரெட் உள்ளிட்ட புகைபிடித்தல் தொடர்பான காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறும்போது அது குறித்து எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்று வருகின்றன. புகைபிடித்தல் தொடர்பாக எச்சரிக்கை வாசகங்கள் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களில் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில்
இதனை ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் அமல்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களின் விதிகளை திருத்தியமைத்து இன்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி; ஓடிடி தளத்தில் இனி வெளியாகும் படங்களில் புகைப்பிடித்தல், புகையிலை பொருள்கள் வரும் காட்சிகளில் ‘புகையிலை புற்றுநோயை உண்டாக்கும்’ அல்லது ‘புகையிலை உயிரைக் கொல்லும் என்ற எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விதிகளை மீறும் ஓடிடி தளங்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற முன்னணி ஓடிடி தளங்கள், 30 வினாடிகள் ஓடக்கூடிய புகையிலை குறித்த எச்சரிக்கை காணொலியை உள்ளடக்கத்தின் தொடக்கம் மற்றும் நடுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவை தவிர புகையிலை எச்சரிக்கை தொடர்பான 20 வினாடி ஆடியோ கிளிப்பிங்கும் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post புகைபிடித்தலுக்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட வேண்டும்: ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: