புதுக்கோட்டையில் முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெறும் இடத்தை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆய்வு

புதுக்கோட்டை, மே 31: புதுக்கோட்டையில் முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெற உள்ள இடத்தை டெல்லி சிறப்பு பிரதிநிதி நேற்று ஆய்வு செய்தார்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே கோர்ட் உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை ஏற்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கு வழிவகை செய்தது. இந்நிலையில் ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழக அரசு சார்பில் மூத்த வக்கில்களை உச்ச நீதிமன்றத்தில் வாதாட செய்து தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் என்று தீர்ப்பை பெற்று தந்தது.

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றியைப் பெற்றுத் தந்த கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பாக பாராட்டு விழா கூட்டம் புதுக்கோட்டையில் வரும் ஜூன் 5ம்தேதி தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் விழா நடைபெறும் புதுக்கோட்டை சிப்காட்டில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை பகுதியில் உள்ள இடத்தில் சமீபத்தில் கால்கோல் விழா நடைபெற்றது. இந்நிலையில் விழா நடைபெறும் இடத்திற்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நாகை விஜயன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பந்தல் அமைப்பாளர்கள் நடைபெறும் பணிகள் குறித்து விளக்கினர். பின்னர் பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்க வேண்டும் என அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது திமுகவினர் பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக நேற்று கீரனூர் வந்த தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நாகை விஜயன் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன் இல்லத்திற்கு சென்று அவரின் தந்தை ஆசிரியர் கண்ணன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

The post புதுக்கோட்டையில் முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெறும் இடத்தை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: