திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

திருவிடைமருதூர், மே 31: திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு கடந்த 24ம் தேதி தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் 6ம் நாளான நேற்று முன்தினம் இரவு உத்திர நட்சத்திரம் தனுர் லக்னத்தில் மகாலிங்க பெருமானுக்கும் பிரகத்சுந்தர குஜாம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதையொட்டி பக்தர்கள் சீர்வரிசைகள் சமர்பித்தல், மாலை மாற்றும் வைபவம், ஊஞ்சல் மற்றும் நலுங்கு வைத்தல் நிகழ்ச்சிகள் ஐதீக முறைப்படி நடந்தது. பிறகு நாதஸ்வர மேளதாளம், வேத மந்திரங்கள் முழங்க, அக்னி வார்த்து திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கும் 7 அடுக்கு தீப மகா ஆரத்தியுடன் 16 விதமான சோடச உபசார பூஜைகள் செய்யப்பட்டு பஞ்ச ஹாரத்தி தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் appeared first on Dinakaran.

Related Stories: