அரசுப்பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரிக்கிறது: இல்லம் தேடி கல்வி; கணினி வகுப்புகள்; மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி; உயர்கல்வி செல்லும்போது நிதியுதவி…

* சிறப்பு செய்தி
பள்ளிக் கல்வித்துறையில் அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் அதிக அளவில் வருவதால் இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக் காலத்தின்போது பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வந்ததன் காரணமாக அமைச்சர்களே பலபேர் மாற்றப்பட்டனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் 7 முறை கல்வி அமைச்சர்கள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக, திமுக அரசுதான், கல்வித்துறையை இரண்டாக பிரித்து பள்ளிக்கல்வி, உயர்கல்வி என்று மாற்றி அமைத்தது.

அதற்காக தனித் தனி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறையில் பல மாற்றங்கள் வந்தன. சமச்சீர் கல்வி என்ற புதிய முறை கொண்டு வரப்பட்டது. அதற்கேற்ப பாடத்திட்டங்களும் மாற்றப்பட்டன. அதற்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறையில் பல குளறுபடிகள் நடந்தன. ஒன்றிய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்ட பல அம்சங்களை நிறைவேற்றும் வகையில் பள்ளிக் கல்வித்துறையில் அவற்றை புகுத்தும் முயற்சிகள் நடந்தன. அதன் தொடக்கமாக பள்ளிக் கல்வியின் இயக்குநர் பதவி என்பது ரத்து செய்யப்பட்டு, ஆணையர் பதவி அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி இரண்டு ஆணையர்கள் கடந்த கால ஆட்சியில் நியமிக்கப்பட்டனர். ஆனால், பள்ளிக் கல்வித்துறையில் பெரிய மாற்றங்கள் ஏதும் நடக்கவில்லை. ஆணையர் பதவியில் இருந்த அதிகாரி ஆசிரியர்களையோ, மாணவர்களையோ நேரில் சந்திப்பதில்லை. பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வும் மேற்கொண்டதில்லை. மாவட்ட வாரியாக பள்ளிகள் செயல்படும் விதமும் அறிந்திருக்கவில்லை. அதனால் பல குளறுபடிகள் நடந்தன. குறிப்பாக, காலையில் ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவு மாலையில் மாற்றப்படும். இதனால் ஆசிரியர்கள் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

இது தொடர்பாக வந்த புகார்களின் பேரில் தற்போது அந்த பதவியில் இருந்து ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, மீண்டும் இயக்குநர் பதவியே வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது உள்ள அரசு வந்த பிறகு , பள்ளிக் கல்வித்துறையில் புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இல்லம்தேடிக் கல்வி, கணினி வகுப்புகள், வேலை வாய்ப்புக்கான பல புதிய முயற்சிகள், மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சிகள், என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மதிய உணவுத் திட்டம் போல காலைச் சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றதால், அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படுவதுடன், அனைத்து வகுப்பு மாணவர்களும் பயன் பெறும் வகையில் இந்த திட்டம் மேம்படுத்தப்பட உள்ளது.மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவியர் உயர்கல்வி செல்லும் போது, ரூ.1000 வழங்கும் திட்டமும், அரசுப் பள்ளிகளில் படித்தால் உயர்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கிடைப்பது போன்ற பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது தவிர பள்ளிக் கல்விக்கான இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்து வெளியில் வந்தால் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற நலன்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது. மேலும், உயர்கல்விக்கான வழிகாட்டும் மையங்களையும் இந்த ஆண்டில் பள்ளிக்கல்வித்துறை அமைத்து, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டி வருகிறது. அதனால், அரசுப் பள்ளிகளின் மீது தற்போது பெற்றோரின் கவனம் திரும்பியுள்ளது. அதனால் கடந்த ஆண்டே, அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் வரத் தொடங்கி சேர்க்கை அதிகரித்தது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாகவே மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில் பேரணி நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வி, தொடக்ககல்வித்துறைகள் கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளன. இந்த பேரணியில் அரசுப் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள், திட்டங்கள், காலை சிற்றுண்டித் திட்டம், விலையில்லா பொருட்கள் வழங்குதல், உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், இட ஒதுக்கீடு விவரங்கள் அனைத்தும் பொதுமக்கள் அறியும்படி இந்த பேரணியில் வெளிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த பேரணியை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் சேர்க்கை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இடைநின்ற மாணவர்கள் குறித்த விவரங்கள் திரட்டபட்டு, அவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு திரும்ப அழைத்து வரும் பணியில் மேற்கொள்ளப்பட உள்ளது. பள்ளிகளை விட்டு வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ள மாணவ மாணவியரின் விவரங்களை யும் திரட்டி, அவர்கள் உரிய முறையில் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

இதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரடியாகவே பல பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பேசி அவர்களின் குறைகளை கேட்டு வருகிறார். அதேபோல பள்ளிகளில் நீடித்து வரும் பிரச்னைகள், கட்டமைப்பின்மை குறித்த பிரச்னைகளையும் கேட்டு வருகிறார். அது விரைவில் சரி செய்யப்பட்டு, இந்த கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகள் போல செயல்படத் தொடங்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை இருந்த சில இடர்பாடுகள் தற்போது நீங்கியுள்ள நிலையில், வரும் கல்வி ஆண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனநிறைவைக் கொடுக்கும் ஆண்டாக இருக்கும். பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை இருந்த சில இடர்பாடுகள் தற்போது நீங்கியுள்ள நிலையில், வரும் கல்வி ஆண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனநிறைவைக் கொடுக்கும் ஆண்டாக இருக்கும்.

The post அரசுப்பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரிக்கிறது: இல்லம் தேடி கல்வி; கணினி வகுப்புகள்; மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி; உயர்கல்வி செல்லும்போது நிதியுதவி… appeared first on Dinakaran.

Related Stories: