சோதனை ஓட்டத்துக்கு பின்னர் ஜூனில் இந்திரா நகர் யு வடிவ மேம்பாலம் திறப்பு: தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்

* சிறப்பு செய்தி
ராஜிவ் காந்தி சாலை இந்திரா நகர் யு வடிவ மேம்பாலம் சோதனை ஓட்டத்துக்கு பின்னர் ஜூன் மாதம் இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, ராஜிவ் காந்தி சாலையில் எப்போதும் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. ஐடி நிறுவனங்கள் உட்பட பல்வேறு வகையான அலுவலகங்கள் இருப்பதால், பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சாலையில் வந்து செல்கின்றன.

குறிப்பாக ராஜிவ் காந்தி சாலை மற்றும் ஈசிஆர் சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பு மற்றும் இந்திரா நகர் சிக்னல் சந்திப்பை கடக்க குறைந்தபட்சம் 20 நிமிடம் ஆகிறது. பீக் அவர்சில் 30 நிமிடம் முதல் 40 நிமிடங்கள் ஆகிறது. இதனால், இந்தச் சாலையில் சிறிது போக்குவரத்து தடைப்பட்டாலும், வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்தச்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தி டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்ட பரிந்துரை செய்தனர். அதன்படி ராஜிவ் காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே யு வடிவில் ரூ.108 கோடியில் மேம்பாலம் அமைக்க கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் அரசு உத்தரவிட்டது. எனவே, இதற்கு நவம்பர் மாதத்தில் ரூ.108.13 கோடி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. எனினும் பாலம் அமைக்கும் பணிகள் 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதுகுறித்து டிஎம்ஆர்டிசி அதிகாரி கூறுகையில், ‘‘சிறுசேரியில் இருந்து மத்திய கைலாஷ் நோக்கி செல்லும் வாகனங்கள் உயரமான நிலையில் யூடர்ன் செய்ய முடியும். பின்னர் இந்திரா நகர் 2வது அவென்யூ மற்றும் அங்கிருந்து செல்லும் பிற சாலைகளைப் பயன்படுத்தி இலக்குகளை அடைய முடியும். சுமார் 250 மீட்டர் கொண்ட மேம்பாலத்தின் பிரதான பகுதியை அமைக்கும் பணி முடிந்துள்ளது. தற்போது பாலம் ஓரத்தில் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. மே 31ம் தேதிக்குள் பணிகள் முடிக்க ஒப்பந்ததாரருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது அந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. மேம்பாலத்தில் ஜூன் முதல் மற்றும் 2ம் வாரத்தில் சோதனை ஓட்டம் நடைபெறும்.

பின்னர் ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். அதேபோல் டைடல் பார்க் சந்திப்பிற்கு அருகில் கட்டப்பட்டுள்ள 2வதும் மேம்பாலம் அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். டைடல் பார்க் மற்றும் சிஎஸ்ஐஆர் சாலை சந்திப்புகளுக்கு இடையே வரும் இருவழிப்பாதை ஒரே திசை மேம்பாலம் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகனங்கள் யூடர்ன் எடுக்க பயன்படுத்தப்படும். டைடல் பார்க் மற்றும் இந்திராநகர் சிக்னல் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு 13,000 வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த பணிகள் நிறைவடையும் போது டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் சிக்னல்கள் அகற்றப்பட்டு வாகனங்கள் சீராக தடையின்றி செல்ல ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் தகவல் தெரிவித்தார்.

The post சோதனை ஓட்டத்துக்கு பின்னர் ஜூனில் இந்திரா நகர் யு வடிவ மேம்பாலம் திறப்பு: தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: