தரம் வாய்ந்த துறைகளை தேர்வு செய்தால் வளம் நிறைந்த வாழ்வைப் பெறலாம்

ப்ளஸ் 2 க்கு பிறகு என்ன படிப்பை தேர்வு செய்ய வேண்டும்? என்ற முடிவே ஒரு மாணவனின் முழு வாழ்க்கையையும் நிர்ணயிக்கும். விரும்பிய பாடப்பிரிவைத் தேர்வு செய்து, படித்து, பின் விரும்பிய வேலையைப் பெற்று அல்லது விரும்பிய தொழிலை மேற்கொள்வது என்பது ஒருவனுக்கு முழு மனநிறைவையும், மகிழ்வையும் தருகின்ற ஒன்றாகும். இதற்கு நாடு முழுமையும் உள்ள படிப்புகளையும், அவற்றிற்கான வாய்ப்புகளையும் முழுவதுமாக அறிந்துகொள்வது அவசியமாகும். இதற்கு தேடல் மிகக் கட்டாயம். குறிப்பிட்ட பாடப்பிரிவை தேர்வு செய்வது என்பது உங்களுடைய விருப்பத்தையும், நோக்கத்தையும், எதிர்காலத் திட்டங்களையும், குடும்பச் சூழல்களையும் பொறுத்ததே ஆகும். மாறாக, நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பொறுத்தது அல்ல என்பதை முதலில் மனதில்கொள்ள வேண்டும்.

மருத்துவம், பொறியியல், விவசாயம், கட்டிடக்கலை, உயிர்தொழில்நுட்பம், விண்ணியல், என்ற தொழில் படிப்புகள், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் உள்ளிட்ட இளநிலை அறிவியல் படிப்புகளை தேர்வு செய்ய விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பிற்குப் பிறகு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் குழுவைத் தேர்வு செய்திருக்க வேண்டும். 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் போதும், ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் கிடைத்துவிடும், பின் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலை மாறி, அனைத்து உயர்படிப்பிற்கான இடங்களுக்கும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி கட்டாயம் என்ற நிலை உருவாகிவிட்டதை மறந்துவிடாதீர்கள். இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் அவசியமாகும்.

அகில இந்திய போட்டித் தேர்வுகள் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் படிப்புகளுக்கும் 12ம் வகுப்பிற்குப் பிறகு பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள், அதுவும் குறிப்பிட்ட பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் போதும் என்ற நிலை பல ஆண்டுகளாக இருந்தது. இந்த நிலையிலும் அகில இந்திய அளவில் 15 சதவிகிதம் தொழில் படிப்பு இடங்களுக்கு முயற்சி செய்து வெற்றி பெற்ற மாணவர்கள் இல்லாமலில்லை. ஆனால், தற்போது சில பாடங்களுக்கு பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரையில் மாணவர்களின் கனவு இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை நோக்கியே உள்ளது.

அரசின் பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர, மாணவர்கள் மத்திய உயர்நிலைக் கல்வி தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் ஜேஇஇ தேர்வையும், இதைத் தொடர்ந்து இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நடத்தும் JEE Advanced தேர்வையும் எழுதி தேர்ச்சி பெற்று அகில இந்திய தரவரிசை பட்டியலில் இடம்பெற வேண்டும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேசன் அண்ட் ரிசர்ச், இண்டியன் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, உணவு அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பயிர் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவை ஜேஇஇ தரவரிசைப் பட்டியலிலிருந்து மாணவர்களைத் தேர்வு செய்துகொள்கின்றன. இவற்றிற்கெல்லாம் 12ம் வகுப்பில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. குறிப்பிட்ட குறைந்தபட்ச தேர்ச்சி இருந்தாலே போதுமானது.

எம்பிபிஎஸ், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், சித்த மருத்துவம், இந்திய மருத்துவமான ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா போன்ற படிப்புகளுக்கும், நீட் என்ற தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது கட்டாயம். அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) மருத்துவக் கல்வி நிறுவனம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ள தங்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஜிப்மர் தனித்தனியே அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. இந்தியா முழுமையும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இவற்றிற்கு நீட் வழியாகத்தான் இடம் கிடைக்கும். அண்ணா பொறியியல் பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள், அதன் துறைகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகள் அனைத்தும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நுழைவுத் தேர்வுகள் மூலம் மாணவர்களைச் சேர்க்கின்றன.

தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விவசாயப் பல்கலைக் கழகத்தில் உள்ள இளநிலை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு மாணவர்கள் 12ம் வகுப்பில் பெறும் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோல்தான், தமிழ்நாட்டில் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீன்வள படிப்புகள், நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புகளுக்கும். கடல்சார் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வைச் சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் நடத்துகிறது. 12-வதுக்குப் பிறகு விமான ஓட்டுநர் (பைலட்) பதவிகளும், பெண்களுக்கு ஏர்ஹோஸ்டர் படிப்பிற்கு தேர்வுகளும் நடைபெறுகின்றன. சட்டப்படிப்பு படிக்க விரும்புவர்கள் தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் சேர, காமன் லா அட்மிஷன் டெஸ்ட் என்ற தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டின் டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர 12வது தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். சார்ட்டர்டு அக்கவுண்டன்சி (சிஏ) படிக்க, காமன் புரொபிசியன்சி டெஸ்ட் நடத்தப்படுகிறது. இவை தவிர கணக்கியல் பிரிவை எடுத்து படித்தவர்களும், மற்ற துறையில் படித்தவர்களும் பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. கார்ப்பரேட் போன்ற படிப்புகளை 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்ந்து படிப்பதுடன் ICWAI (Institute of Cost Works Accounts of India) படிப்புகள் அல்லது ஏசிஎஸ் (Associate Company Secretary) படிப்புகளையும் படிக்கலாம். உங்களது தேடல் மூலமாகவே உங்களுக்கான தரம் வாய்ந்த துறையையும், அதற்கான பலன்களையும் பெற முடியும். அதைத் தவிர்த்து உறவினர்கள், நண்பர்களின் கட்டாயத்தின் பேரில் ஓர் துறையைத் தேர்வுசெய்து படிப்பது தவறானதாகும். மாறாக அவர்களின் அறிவுரையை ஏற்று உங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யுங்கள்.

The post தரம் வாய்ந்த துறைகளை தேர்வு செய்தால் வளம் நிறைந்த வாழ்வைப் பெறலாம் appeared first on Dinakaran.

Related Stories: