ஜடேஜாவை தூக்கி மகிழ்ந்த டோனி

கடைசி பந்தில் வெற்றிக்கான ரன்களை ஜடேஜா அடிக்க தயாரானார். மைதானத்தில் இருந்த சென்னை அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என்ன நடக்குமோ என்ற ஆவலுடன் மிகுந்த பதற்றத்துடன் இருந்தனர். அதே போல குஜராத் அணியின் ரசிகர்களும் அந்த ஒரு நிமிடத்தில் என்ன நடக்க இருக்கிறதோ என்ற ஆவலுடன் இருந்தனர். ஜடேஜா, கடைசி பந்தை அடிக்க தயாரானார். அனைவரும் பதற்றத்துடன் இருக்க, டோனி அப்படியே கண்களை மூடி கொண்டார். வெற்றிக்கான 4 ரன்களை விளாசியதும் சென்னை அணி வீரர்கள் உற்சாக துள்ளலில் மைதானத்திற்குள் ஓடி வந்தனர். ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர். அப்போதுதான் டோனியும் கண்ணை திறந்து, வெற்றி பெற்றதை அறிந்து மைதானத்துக்குள் ஓடி வருகிறார். அங்கு, பேட்டை தூக்கியபடி வலம் வந்த ஜடேஜாவை அப்படியே அலேக்காக தூக்கி கட்டி அணைத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார். சக வீரர்களும், தோளில் தட்டி பாராட்டு மழை பொழிந்தனர். இந்த காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். டோனி, தனது மனைவி மற்றும் மகளை கட்டியணைத்து வெற்றியை பகிர்ந்து கொண்டார். பின்னர் மைதானத்தில் ரசிகர்களிடையே கைகளை அசைத்தபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் வீரர்கள் அனைவரும் கோப்பையுடன் போஸ் கொடுத்தனர். அவர்களிடம் கோப்பை வழங்கி விட்டு சக வீரர்களில் ஒருவர் போன்று ஒரு ஓரத்தில் நிற்கிறார். இது தலைவனுக்குரிய பண்பை காட்டியது. குஜராத் அணியில் சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். கில் 3 ரன்னில் இருந்தபோது வழங்கிய மிக எளிதான கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் கோட்டை விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட கில், 39 ரன் விளாசினார். போட்டி முடிந்ததும் டோனியிடம் தீபக் சாஹர் ஆட்டோ கிராப் கேட்டார். அதற்கு அவர் ஒருவரிடம், ‘கேட்சை தவற விட்டுட்டு இப்போ ஆட்டோ கிராப் கேட்கிறார்’ என கூறி மறுக்கிறார். இருப்பினும் விடாமல் கேட்க, வேறு வழியின்றி சட்டையில் ஆட்டோ கிராப் போடுகிறார் டோனி. போட்டியை வீடுகள், கடைகள் மற்றும் விடுதிகளில் ஏராளமான ரசிகர்கள் விடிய விடிய பார்த்தனர்.

அப்போது, சென்னை அணி வெற்றி பெற்றதும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சிலர், தெருக்களில் ஆடி பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இன்னும் சிலர், ஆர்வ கோளாறில் தாங்கள் பார்த்து கொண்டிருந்த டிவியை ஓங்கி அடித்தும் கதவை உடைத்ததும், பட்டாசு வெடித்தும் வெற்றியை வெளிப்படுத்தினர். இன்னும் சிலரது வீடுகளில் மூதாட்டி கூட வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். விடிய விடிய ரசிகர்கள் நடனமாடியும், ஒருவரையொருவர் கட்டியணைத்தும் மகிழ்ச்சியில் திளைத்தனர். சில ரசிகர்கள், சென்னை அணி வெற்றி பெற இருகரம் கூப்பி வணங்கினர். வெற்றி பெற்றதும் கைகளை ஆவேசமாக தட்டி ஆரவாரமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ரசிகர்களில் ஒருவர், ‘இன்னும் பாலில் (பந்து) ஜெயிக்க வேண்டும் அம்மா… ஓம் சக்தி.. சமயபுரத்து மாரியம்மா… ஆத்தா.. ஆத்தா எப்படியாவது சென்னை வெற்றி பெற வேண்டும் என்று கைகூப்பி வேண்டுகிறார். வெற்றிக்கான ரன்களை எட்டியதும் அப்படியே ஒருகணம் ஆத்தா, ஆத்தா என ஆக்ரோஷமாக சத்தம் எழுப்புகிறார். அவரை மற்றொருவர் கட்டி பிடித்து ஆசுவாசப்படுத்துகிறார்.ஒரு வீட்டில் 3 இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து போட்டியை ரசிக்கின்றனர். அப்போது, வெற்றிக்கான ரன்களை அடித்ததும் 3 பேரும் உற்சாகத்தில் துள்ளி மகிழ்கின்றனர். ஒருவரையொருவர் கட்டி அணைத்து ஆர்ப்பரிக்கின்றனர். அவர்களில் ஒருவர், உற்சாக மிகுதியில் துணியை எடுத்து டி.வி. மீது வீசுகிறார். இதில் டி.வி. கீழே விழுகிறது. நல்லவேளையாக உடையவில்லை. உடனே ஒரு இளைஞர் பதற்றத்துடன் தூக்கி சரி செய்கிறார். தீபக் சாஹர், தான் தங்கியிருந்த அறையின் மாடியில் நின்று கொண்டு ரசிகர்களை பார்த்து உற்சாக மிகுதியில் நடனமாடி மகிழ்ந்தார். ரசிகர்களும் நடனமாடி மகிழ்ந்தனர்.

The post ஜடேஜாவை தூக்கி மகிழ்ந்த டோனி appeared first on Dinakaran.

Related Stories: