ராமேஸ்வரம், மே 30: பாம்பன் சாலை பாலத்திலிருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிருடன் மீட்கப்பட்டார். பாம்பன் சாலை பாலத்தில் நேற்று மாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென தடுப்புச் சுவரை தாண்டி பாலத்தின் மேலே இருந்து கடலில் குதித்தார். தத்தளித்துக் கொண்டிருந்த அவரை அப்பகுதி மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற முதியவர் பரமக்குடி அருகே வெங்குடன்குறிச்சியை சேர்ந்த பொன்னுச்சாமி(64) என்பது தெரிந்தது.
இவருக்கு திருமணமான ஒரு மகள் உள்ளார். பராமரிக்க யாரும் இல்லாததால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் முதியவரை அவருடைய மகளிடம் மரைன் போலீசார் ஒப்படைத்தனர். இதேபோல ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மரைன் போலீசார் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் போலீசாரின் விசாரணையில் அவர் தேனி மாவட்டம் கே.கே.பட்டியை சேர்ந்த வேலுமணி(70) என தெரிந்தது. குடும்பத்தில் முறையாக கவனித்து கொள்ளாததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். விசாரணைக்கு பின் போலீசார் நேற்று உறவினர்களை வரவழைத்து மூதாட்டியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
The post பாம்பன் பாலத்தில் தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு appeared first on Dinakaran.