பதுக்கல் மது விற்ற 23 பேர் கைது: 198 பாட்டில்கள் பறிமுதல்

 

மதுரை, மே 30: மதுரையில் பதுக்கல் மது விற்பனை செய்த 23 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 198 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மதுரையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இதன்படி மது பாட்டில்களை அரசு மதுக்கடையில் கொள்முதல் செய்து, அவற்றை தங்கள் வீடுகளில் பலரும் பதுக்கி வைக்கின்றனர். பின்னர் மதுக்கடை விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, நண்பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு முன்பாக மது தேவைப்படுவோருக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் பெறுகின்றனர்.

இதை சில பகுதிகளில் பல்வேறு தரப்பில் ஒரு தொழிலாகவே செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இதுபோல் மது பாட்டில்களை கொள்முதல் செய்து பதுக்கி வைத்து விற்பனை செய்வதால் அவர்களுக்கு இழப்பு ஏதுமில்லை. இன்று விற்பனையாகாத பாட்டில்கள் மறுநாள் அல்லது அடுத்தநாள் விற்பனை செய்யப்படும். மேலும் இத்தொழிலில் அவர்களின் முதலீடு என்பது குறைவாக இருப்பினும் வருமானம் அதிகம் கிடைக்கிறது. இதனால் பெண்கள் உள்ளிட்ட பலரும் சட்டத்திற்கு புறம்பாக இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இருப்பினும் இந்த விதிமீறல் தொடர்கதையாகிவ வருகிறது. இதன்படி மதுரை மாநகர் பகுதிகளில் நகர் போலீசார் மற்றும் மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் சிறப்பு ரோந்து பணிகளை மேற்கொண்டனர். அப்போது, செல்லூர், மதிச்சியம், கரிமேடு, திலகர்திடல், எஸ்.எஸ்.காலனி, கீரைத்துறை மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டில்களை, பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துகொண்டிருந்த 23 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 198 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post பதுக்கல் மது விற்ற 23 பேர் கைது: 198 பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: