காவல் நிற்க ஆவல்…

இந்தியாவின் ஜனநாயகக் கோயிலாக வர்ணிக்கப்படுகிறது நாடாளுமன்றம். இதுவரை செயல்பட்ட நாடாளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர்களின் 900 ஆண்டுகால ஏகாதிபத்தியத்தின் சாட்சியாக திகழ்ந்தது. 1920ம் ஆண்டு இந்தியாவின் தலைநகரை கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றியது ஆங்கிலேய அரசு. இதன் தொடர்ச்சியாக ‘கவுன்சில்ஹவுஸ்’ என்ற பெயரில் 1927ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது நாடாளுமன்ற கட்டிடம். இந்த கட்டிடத்தை அதே ஆண்டில் ஜனவரி 18ம்ேததி, வைஸ்ராய் இர்வின்பிரபு திறந்து வைத்தார். இந்தவகையில் இதுவரை செயல்பட்ட இந்திய நாடாளுமன்றக்கட்டிடம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தநிலையில் ‘புதிய நாடாளுமன்றத்தில் புதிய இந்தியா’ என்ற கோட்பாடுடன் ரூ1,250 கோடி மதிப்பில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

அடுத்த 200 ஆண்டுகள் இருக்கக்கூடிய நாட்டின் பெருமை மிகு சின்னம் இது. அதைவிட நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில். இந்த கோயிலில் அமர்ந்து கொண்டுதான், மக்களின் பிரச்னைகளை பேசி அதற்கு முடிவு காண்கிறோம்’ என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது கூற்றுப்படி இந்த கோயிலை திறந்து வைப்பதற்கான அங்கீகாரத்தை நாட்டின் முதல்குடிமகள் என்ற அந்தஸ்து கொண்ட குடியரசுத் தலைவருக்கு வழங்கவில்லை. அதுவும் இந்திய வரலாற்றிலேயே பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரை நாங்கள்தான் குடியரசுத் தலைவர் ஆக்கினோம் என்று பெருமை பேசுபவர்கள் அவருக்கு அழைப்பிதழ் கூட வழங்கவில்லை என்பதுதான் முரண்பாடு.

இது குடியரசுத் தலைவருக்கான அவமரியாதை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீதான நேரடித்தாக்குதல். நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா உறிஞ்சப்பட்ட நிலையில் இந்தப்புதிய கட்டிடத்திற்கு மதிப்பு இல்லை என்பது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் குரல். இதனால் இன்று நடக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்கிறோம் என்பது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு. இந்திய நாடாளுமன்றம் ராஜ்யசபா (மாநிலங்களின் கவுன்சில்), மக்களவை (மக்களின் வீடு) என்று இரு அவைகளை கொண்டது. இந்த மக்கள் வீட்டின் பெருமைக்குரிய முதல் உறுப்பினர் இந்தியகுடியரசுத் தலைவர். இந்த வீட்டை கூட்டவும், கலைக்கவும் அவருக்கே அரசியல் சாசன சட்டம், அங்கீகாரம் அளித்துள்ளது.

ஆனால் புதிதாக கட்டப்பட்டு திறப்புவிழா காணும் வீட்டில் பெருமைக்குரிய முதல் உறுப்பினரை கவுரவிக்கவில்லை என்பது மட்டுமல்ல, அழைப்பிதழ் கூட வழங்கவில்லை என்பது எந்த நிலையிலும் ஏற்புடையதல்ல. நாட்டின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவரை அவமதிப்பது, ஒட்டு மொத்த மக்களையும் அவமதிக்கும் செயல் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இதற்கிடையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அதிகாரப்பூர்வ வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி ‘புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் நாடாளுமன்றம், இந்தியாவின் முதல்குடிமகளை பெருமைப்படுத்தத் தவறியது ஏன் என்பது சாமான்ய மக்களின் மனதில் எழுந்துள்ள சந்தேக கேள்வி.

ஆங்கிலேய சுவடுகளின் அடையாளத்தை மாற்றி இந்தியப்பெருமைகளை, இந்த நாடாளுமன்ற கட்டிடம் தாங்கி நிற்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அதே நேரத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை வேர்களை சிதைக்காமல், அதற்கு காவல் நிற்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தை போற்றும் மக்களின் ஆவல்.

The post காவல் நிற்க ஆவல்… appeared first on Dinakaran.

Related Stories: