ஜப்பான் என்றாலே புதுமையும் கண்டுபிடிப்புகளும்தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்!

ஜப்பான்: ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், (23.5.2023) அன்று சிங்கப்பூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு (25.5.2023) அன்று இரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணம் வந்தடைந்தார். ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றையதினம் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ஜப்பான் என்றாலே புதுமையும் கண்டுபிடிப்புகளும் தான்! கட்டுமானம், சுரங்கம் போன்ற மிகக் கடுமையான மனித உழைப்பைக் கோரும் துறைகளில், பணிகளை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செய்து முடித்திடும் கருவிகளை உற்பத்தி செய்யும் நூற்றாண்டு பழமையான #Komatsu நிறுவனத்தின் ஒசாகா தொழிற்சாலையைப் பார்வையிட்டேன். ஏற்கனவே கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாட்டில் #Komatsu தொழிற்சாலையை அமைச்சராகத் திறந்து வைத்த அதே உணர்வுடன், அந்நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று கோரி, #GIM2024-க்கு அழைப்பு விடுத்தேன். என்று கூறியுள்ளார்.

The post ஜப்பான் என்றாலே புதுமையும் கண்டுபிடிப்புகளும்தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்! appeared first on Dinakaran.

Related Stories: