ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கோயில் திருவிழா: 16 கி.மீ பழக்கூடைகள் சுமந்து வழிபாடு

மேலூர், மே 27: மேலூர் அருகே சிட்டம்பட்டியில் பழமையான தேவி அம்பாள் கோயில் உள்ளது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பல நூறு வருடங்களாக, இக்கிராமத்து மக்கள் மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டு, அங்கிருந்து, மலை வாழைப்பழங்களை ஆண்கள் மட்டும் ஓலை பெட்டியில் வைத்து தலையில் சுமந்து வரும் வினோத திருவிழா வைகாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். மதுரை நெல்பேட்டையில் இருந்து இவர்கள் ஊர்வலமாக கிளம்புவதற்கு முன்பு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் உடலில் சந்தனத்தை பூசிக்கொள்கின்றனர். பின் பனை ஓலை பெட்டிகளில் மலை வாழை பழங்களை, வாழை நார் கொண்டு கட்டி தங்கள் தலையில் சுமந்தபடி 16 கி.மீ தூரத்திற்கு நடந்து வந்து, தேவி அம்பாளுக்கு பூஜை செய்கின்றனர்.

ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில், படையல் இடப்பட்ட வாழைப்பழங்களை தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று, அனைவருக்கும் கொடுக்கின்றனர்.தற்போது டூவீலர், கார் என வாகனங்கள் பெருகி விட்டாலும், பாரம்பரிய முறைப்படி கால்நடையாகவே சென்று, இந்த வினோத விழாவை, தங்கள் பகுதியில் விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டுதலுடன் இப்பகுதி ஆண்கள் செயல்படுத்தி வருகின்றனர். மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்த கிராம மக்கள் மற்றும் அம்பலகாரர்களை வழியெங்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

The post ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கோயில் திருவிழா: 16 கி.மீ பழக்கூடைகள் சுமந்து வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: