சோழவந்தான் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச்செயின் பறிப்பு: வாலிபர் கைது

சோழவந்தான், மே 27: சோழவந்தான் அருகே மூதாட்டியிடம் செயின் பறித்து தப்பிய வாலிபரை போலீசார் உடனடியாக தேடிப்பிடித்து கைது செய்தனர். சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் வசிப்பவர் வெள்ளையன் அம்பலம். இவரது மனைவி கருப்பாயி (70). கணவர் இறந்த பின் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் வீட்டில் தூங்கிய மூதாட்டியின் கழுத்திலிருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பினார். செயினை பறிக்கும் போது அந்த நபருடன் போராடியதால் மூதாட்டியின் கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்த சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி எஸ்.ஐ குபேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதன்படி செயினை பறித்துச்சென்றது மூதாட்டி வீட்டின் அருகில் குடியிருக்கும் கருப்பையா மகன் ஆறுமுகம் (32) என தெரியவந்தது. இதையடுத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார், மேலக்கால் – விக்கிரமங்கலம் சாலையில் மலைப்பட்டி அருகே ஆறுமுகத்தை கைது செய்து நகையை மீட்டனர். சாரணையில், மூதாட்டி கருப்பாயிக்கு, அருகில் குடியிருக்கும் ஆறுமுகம் அவ்வப்போது பணம் வாங்குவதுடன், தேவையான உதவிகள் செய்வதும் வழக்கம். இதனால் அடிக்கடி மூதாட்டி வீட்டிற்கு செல்லும் இவர், நேற்று முன்தினம் இரவு அவர் வெளியில் இருந்த நேரத்தில் வீட்டிற்குள் பதுங்கியுள்ளார்.

பின் மூதாட்டி வந்த தூங்கிய சிறிது நேரத்திற்கு பிறகு, அவரது முகத்தை துணியால் அழுத்தி செயினை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். மூதாட்டி கூறிய அடையாளம் மற்றும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் உதவியுடன் ஆறுமுகத்தை அடையாளம் கண்டு போலீசார் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சோழவந்தான் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச்செயின் பறிப்பு: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: