குவாலிபயர்-2 போட்டியில் குஜராத் அசத்தல் வெற்றி: பட்டாசாக வெடித்த சுப்மன் கில் மீண்டும் சதம்

அகமதாபாத்: நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் வரும் ஞாயிறன்று இதே ஸ்டேடியத்தில் சென்னை அணியை சந்திக்கிறது. நடப்பு ஐபிஎல் சீசன் லீக் சுற்று போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் மற்றும் சென்னை அணிகள் முதல் குவாலிபயர்-1 போட்டியில் மோதின. இதில் குஜராத்தை வீழ்த்தி முதல் அணியாக சென்னை இறுதி போட்டிக்குள் நுழைந்தது. மற்றொரு அணி எது என்பதை முடிவு செய்யும் குவாலிபயர் 2 போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

நடப்பு சாம்பியன் குஜராத் மற்றும் 5 முறை சாம்பியனான மும்பை அணிகள் மோதும் போட்டி என்பதால் ஸ்டேடியம் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார். குஜராத் அணியின் விருத்திமான் சகா மற்றும் சுப்மன் கில் இருவரும் ஆட்டத்தை தொடங்கினர். சகா 18 ரன்கள் மட்டுமே எடுத்து பியூஸ் சாவ்லா பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். சூப்பர் பார்மில் உள்ள கில் நேற்றும் தனது அதிரடியை காட்டி 49 பந்துகளில் மீண்டும் ஒரு சதம் விளாசி உள்ளூர் ரசிகர்களுக்கு விருத்து படைத்தார். அவர் 129 ரன்கள்(60 பந்து, 7 பவுண்டரி, 10 சிக்சர்) விளாசி ஆகாஷ் மாத்வால் பந்தில் டிம் டேவிட் வசம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அவருக்கு துணையாக மற்றொரு முனையில் ஆடிய சாய் சுதர்சன் 43 ரன்களுடன்(31 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) ரிடையர்டு ஹட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 28* ரன்கள், ரஷித் கான் 5* ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. அடுத்து 234 ரன்கள் என்கிற இமாலய இலக்கை நோக்கி ரோகித் மற்றும் நிகால் துரத்தலை தொடங்கினர். ஆனால், முதல் மூன்று ஓவருக்குள் 21 ரன்னுக்கு 2 விக்கெட்டுக்களை மும்பை இழந்தது.

அதன்பின் களமிறங்கிய கிரீன்(30 ரன்), திலக் வர்மா(43 ரன்) மற்றும் சூர்யகுமார்(61 ரன்) நம்பிக்கையூட்டும் வகையில் ஆடினாலும், அதன்பின்னர் வந்தவர்கள் வரிசையாக பெவிலியன் நோக்கி நடையை கட்டினர். இறுதியில் மும்பை அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து ேதால்வியடைந்தது. குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. குஜராத் தரப்பில் மொகித் சர்மா அசத்தலாக 2.2 ஒவர்கள் பந்து வீசி 5 விக்கெட்டுகளை அள்ளினார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத், சென்னை அணியை மீண்டும் எதிர்கொள்கிறது.

 

The post குவாலிபயர்-2 போட்டியில் குஜராத் அசத்தல் வெற்றி: பட்டாசாக வெடித்த சுப்மன் கில் மீண்டும் சதம் appeared first on Dinakaran.

Related Stories: