ஒரே அறையில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசுவதில்லை… மனநல பாதிப்புக்கு வழிவகுக்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள்: உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

மனிதவாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் முக்கியமானவை. இதில் ஐ.நா.சபை உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள், தினமும் ஒரு விழிப்புணர்வு நாளை அனுசரித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, நடப்பு மே மாதம் முழுவதும் உலகமனநல மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் 1949ம் ஆண்டு, அமெரிக்காவில் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. ஆனாலும் இதுஒரு உலகளாவிய பிரச்னை என்பதால் அனைத்து நாடுகளும் உலக மனநல மாதத்தை அனுசரித்து வருகிறது. இந்த நாளில் மனநலம் சார்ந்த பல்வேறு தகவல்களை ஆய்வாளர்கள் வெளியிட்டு, மக்கள் மத்தியில் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

உலகை அச்சுறுத்திய கொரோனாவுக்கு பிறகு மனிதர்களின் மனநல பாதிப்புகள் அதிகரித்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்தது. அதனை கடந்து தற்போது உலகம் இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. இது ஒரு புறமிருக்க, அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு அடிமையானவர்களால் குடும்பங்கள், சமூக கட்டமைப்புகள் உடைந்து வருகிறது. இதுவும் சமீபகாலமாக மனநல பாதிப்புகளுக்கு அதிகளவில் வழிவகுத்து வருவதாக மருத்துவம் சார்ந்த உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மனநலம் சார்ந்த உளவியல் நிபுணர் ஷ்யாம்சுந்தர் கூறியதாவது: ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களான கணவன், மனைவி, பிள்ளைகள் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். ஒரே அறையில் தங்குகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு இடையே மனம்விட்டு பேசும் உரையாடல்கள் நடப்பதில்லை. தனித்தனியே அமர்ந்து லேப்டாப், டேப்லெட், ஆன்ட்ராய்டு செல்போன்களில் மூழ்கி விடுகின்றனர். அல்லது ஆன்லைன் விளையாட்டு மற்றும் சமூக ஊடகங்களில் அவர்களின் கவனம் செல்கிறது. இந்தவகையில் விலை உயர்ந்த பொருட்களை பற்றிக்கொண்டு இருப்பவர்கள், விலைமதிப்பற்ற உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஒருவரின் பிரச்னையை மற்றவர்கள் புரிந்து கொள்வதில்லை. அல்லது பொருட்படுத்துவது இல்லை. இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்னைகள் ஏற்படுகிறது. பிள்ளைகளிடமும் அவர்களுக்கு மனக்கசப்பு உருவாகிறது. இந்தநிலை முற்றும் போது, பிள்ளைகள் தனித்து விடப்பட்டதை போன்று உணர்கின்றனர். இதற்கிடையில் பெற்றோரால் கவனிக்கப்படாத பிள்ளைகளின் நிலையை சாதமாக்கும் சிலர், அன்புகாட்டுவது போல், அவர்களை தன்வசப்படுத்தி விடுகின்றனர். இது போன்ற மனிதர்களால் தவறான பாதைக்கு பிள்ளைகள் செல்லும் அவலமும் நிலவி வருகிறது. நவீனவசதிகள் மனிதர்களின் கையில் இல்லாத காலகட்டத்தில் குடும்பங்களில் உரையாடல்கள் அதிகளவில் நடந்தது. விவாதங்கள் எழும்போது ஒருவருக்கொருவர் மனதில் உள்ள எண்ணங்களை அறிய முடிந்தது.

அனைவரும் ஒன்று கூடி உணவருந்துவது, குழு விளையாட்டுகளில் ஈடுபடுவது, குடும்பத்துடன் சுற்றுலா மற்றும் உறவினர் வீடுகளுக்கு செல்லும் வழக்கம் இருந்தது. இதனால் மனது இலகுவாகி பாதிப்புகள் என்பது அறவே இல்லாமல் இருந்தது. தற்போது இவை அனைத்தும் மெல்ல, மெல்ல மறைந்து வருகிறது. இது குழந்தைகளுக்கு மட்டுமன்றி குடும்பத்தை வழிநடத்துவோருக்கும் சில நேரங்களில் மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. இந்த மனஉளைச்சல் அதிகரிக்கும் போது, அதுவே மனநல பாதிப்பாக உருமாறுகிறது. எனவே மனம்விட்டு பேசும் நிகழ்வுகளே மனநலபாதிப்புகளிலிருந்து மனிதர்களை விடுவிக்கும். இதை வலியுறுத்தியே நடப்பு மாதம் முழுவதும் தன்னார்வ அமைப்புகள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு ஷ்யாம்சுந்தர் கூறினர்.

* உடல் மனநலம் கண்கள் போன்றது
‘‘உடல்நலமும், மனநலமும் மனிதர்களுக்கு இரண்டு கண்களை போன்றது. மனநலன் அல்லது மன ஆரோக்கியம் என்பது ஒருவரின் உளவியல், மன எழுச்சி, சமூகப்பார்வை ஆகிவற்றை பொறுத்தே அமைகிறது. ஆரோக்கியமான மனம் என்பது ஒருவரை தெளிவாக சிந்திக்கவும், ஆக்கப்பூர்வமாக செயல்படவும் வழிவகுக்கும். இதனால் அவரது வாழ்க்ைகத் தரமும் மேம்படும். தங்கள் உடல்நலனை பேணிக்காப்பதில் அக்கரை காட்டும் 90 சதவீதம் மக்களுக்கு மனநல பாதிப்புகள் குறித்த எந்த கவலையும் இல்லை என்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது,’’ என்றும் உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

* கணவன், மனைவி, பிள்ளைகள் ஒரே அறையில் இருந்தாலும் அவர்களுக்கிடையே மனம் விட்டு பேசுவது இல்லை. அவரவர் செல்போன், லேப்டாப்களில் மூழ்கிவிடுகின்றனர்.
* இது குழந்தைகளுக்கு மட்டுமன்றி குடும்பத்தை வழிநடத்துவோருக்கும் சில நேரங்களில் மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது.
* மனஉளைச்சல் அதிகரிக்கும் போது, அதுவே மனநல பாதிப்பாக உருமாறுகிறது.

The post ஒரே அறையில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசுவதில்லை… மனநல பாதிப்புக்கு வழிவகுக்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள்: உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: