அரியலூர் ஆண்டிமடம் காவல் நிலையம் சூறையாடல் வழக்கு 6 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைப்பு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: தனி தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விடுதலை படை என்னும் அமைப்பு செயல்பட்டு வந்தது. அந்த அமைப்பினர், கடந்த 1997ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த துப்பாக்கி மற்றும் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்ளை அடித்ததோடு தனி தமிழ்நாடு கோரிக்கை தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தையும் வீசி சென்றனர். இந்த வழக்கில் க்யூ பிரிவு போலீசார் 14 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

விசாரணை காலத்தில் 3 பேர் உயிரிழந்தனர். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் மீதமுள்ள 11 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த 2019ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பூந்தமல்லி நீதிமன்றம் அளித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்தார். காவல்துறையினரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல் நிலையத்தை தாக்கவில்லை என்றாலும் கூட, துப்பாக்கி உள்ளிட்ட அரசு சொத்துகளை கொள்ளை அடித்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

The post அரியலூர் ஆண்டிமடம் காவல் நிலையம் சூறையாடல் வழக்கு 6 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைப்பு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: